அதிகாரிகளை மாற்றக்கோரி சென்டெக்ஸ் நெசவாளர் சங்கத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
அதிகாரிகளை மாற்றக்கோரி சென்டெக்ஸ் நெசவாளர் சங்கத்தில் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களின் எதிர்ப்பால் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னிமலை,
சென்னிமலையில் உள்ள சென்டெக்ஸ் நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் 800–க்கும் மேற்பட்ட நெசவாளர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்தின் மேலாளராக சதீஸ் என்கிற மாரியப்பனும், நிர்வாக இயக்குனராக ரவீந்திரனும் உள்ளனர். சென்னிமலையில் பிரசித்தி பெற்ற நெசவாளர் கூட்டுறவு சங்கமாக திகழ்ந்து வந்த சென்டெக்ஸ் நிறுவனம் கடந்த ஓரிரு வருடங்களாக சரியான இலாபத்தில் இயங்கவில்லை என்றும், இதனால் மேலாளரை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கையாக இருந்து வந்தது.
இந்த நிலையில், நேற்று மகாசபை கூட்டம் நடைபெறும் என சென்டெக்ஸ் நிறுவனம் சார்பில் நெசவாளர்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் நூற்றுக்கணக்கான நெசவாளர்கள் சென்டெக்ஸ் கூட்ட அரங்கிற்கு சென்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணிக்காக போலீசாரும் வந்திருந்தனர்.
இதனை பார்த்த நெசவாளர்கள் மகாசபை கூட்டத்திற்கு எதற்காக போலீசார் வந்துள்ளனர்? என நிர்வாக இயக்குனர் ரவீந்திரனிடம் கேட்டனர். அதற்கு அவர் சரியான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. மேலும் மகாசபை கூட்டத்தில் நெசவாளர்கள் கொண்டு வரும் தீர்மானத்தையும் நிறைவேற்ற முடியாது என அவர் தெரிவித்ததாக கூறி மகாசபை கூட்டத்தை நெசவாளர்கள் புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து நெசவாளர்கள் கூறுகையில், ‘நல்ல முறையில் சங்கத்தை நிர்வகித்த போது 40 சதவீதத்திற்கு மேல் தீபாவளி போனஸ் பெற்று வந்தோம். பிறகு படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு 24 சதவீதம் பெற்றோம். தற்போது சரியான நிர்வாகம் இல்லாததால் இந்த ஆண்டு 16 சதவீதம் மட்டுமே போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் சங்க மேலாளரை மாற்ற வேண்டும் என தீர்மானம் கொண்டு வருவதற்கு நிர்வாக இயக்குநர் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் எங்களை மிரட்டும் வகையில் போலீசாரையும் வரவழைத்துள்ளார். இது நெசவாளர்களுக்கு எதிரான செயல் என்பதால் மேலாளர் மற்றும் நிர்வாக இயக்குநரை மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி நாங்கள் மகாசபை கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். இதனால் மகாசபை கூட்டம் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றனர்.