பசும்பொன்னில் அ.தி.மு.க. பேனர்கள் கிழிப்பு
பசும்பொன்னில் அ.தி.மு.க. சார்பில் வைத்த பேனர்கள் கிழிக்கப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
கமுதி,
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் முத்துராமலிங்கதேவர் ஜெயந்தியையொட்டி நேற்று அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் சென்றிருந்தனர். அவர்களை வரவேற்று அ.தி.மு.க. சார்பில் வரிசையாக பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அ.ம.மு.க. துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும் தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த 150–க்கும் மேற்பட்ட பேனர்கள் திடீரென கிழிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோல், பா.ஜ.க. சார்பில் வைக்கப்பட்டிருந்த சில பேனர்களும் கிழிக்கப்பட்டன.
இதுபற்றி அறிந்ததும், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் விரைந்து வந்தனர். சிலரை அங்கிருந்து எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
இதுபோல், தினகரன் ஆதரவாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கோஷமிட்டதாலும் திடீர் சலசலப்பு உருவானது. பேனர்கள் கிழிக்கப்பட்டது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டும் தேவர் ஜெயந்தியின் போது முதல்–அமைச்சரை வரவேற்று வைத்திருந்த பேனர்கள் கிழிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.