துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி படுகாயம்: கோர்ட்டில் சரண் அடைய வந்தவர் கைது - போலீசார் மடக்கி பிடித்தனர்


துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி படுகாயம்: கோர்ட்டில் சரண் அடைய வந்தவர் கைது - போலீசார் மடக்கி பிடித்தனர்
x
தினத்தந்தி 31 Oct 2018 3:00 AM IST (Updated: 31 Oct 2018 4:44 AM IST)
t-max-icont-min-icon

துப்பாக்கியால் சுட்டதில் விவசாயி படுகாயம் அடைந்தார். இந்த வழக்கில் கோர்ட்டில் சரண் அடைய வந்தவரை போலீசார் மடக்கி பிடித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

குன்னூர், 

குன்னூர் அருகே உள்ள உலிக்கல் பேரூராட்சிக்குட்பட்ட செங்கல்கொம்பை ஆதிவாசி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது 53). இவர் மேட்டுப்பாளையம் அருகே உள்ள நெல்லித்துறை பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். பில்லூர் அணை அருகே உள்ள செங்கல்புதூரை சேர்ந்தவர் பொன்னுசாமி (45). இவரும், தங்கராஜூம் இணைந்து கடந்த 3 மாதங்களுக்கு முன்பு செங்கல்கொம்பை ஆதிவாசி கிராமத்தில் உள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி 2 பேரும் சேர்ந்து அந்த நிலத்தில் 350 வாழைகளை பயிரிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் பொன்னுசாமி, தங்கராஜிடம் விவசாயத்தை தானே பார்த்துக்கொள்வதாக கூறினார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கடந்த 25-ந் தேதி இரவு 2 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பொன்னுசாமி தான் மறைத்து வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் தங்கராஜை சரமாரியாக சுட்டார். இதில், தங்கராஜிக்கு தோள்பட்டை மற்றும் காலில் குண்டு பாய்ந்தது.

துப்பாக்கி சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பொன்னுசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனைதொடர்ந்து ரத்த வெள்ளத்தில் மிதந்த தங்கராஜை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த குன்னூர் போலீஸ் துணை சூப்பிரண்டு கிருஷ்ண மூர்த்தி மற்றும் கொலக்கம்பை போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முக சுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் தப்பி ஓடிய பொன்னுசாமியை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் பொன்னுசாமியை வலைவீசி தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று காலை குன்னூர் கோர்ட்டில் பொன்னுசாமி சரண் அடைய வந்தார். இதனை அறிந்த கொலக்கம்பை போலீசார் பொன்னுசாமியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரிடம் விசாரணை நடத்துவதற்காக கொலக்கம்பை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பொன்னுசாமிக்கு நாட்டு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story