திருப்பூரில் சத்துணவு ஊழியர்கள் 2–வது நாளாக மறியல் 370 பேர் கைது


திருப்பூரில் சத்துணவு ஊழியர்கள் 2–வது நாளாக மறியல்  370 பேர் கைது
x
தினத்தந்தி 30 Oct 2018 11:19 PM GMT (Updated: 30 Oct 2018 11:19 PM GMT)

திருப்பூரில் 2–வது நாளாக மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்கள் 370 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர்,

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் அமைப்பாளர், சமையலர், உதவியாளர்களுக்கு பணிக்கொடையாக ஒட்டுமொத்த தொகை ரூ.5 லட்சத்தை வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு ஊழியர்களுக்கு சட்டரீதியான குடும்ப ஓய்வூதியம் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த 25–ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து இந்த பிரச்சினையில் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு தீர்வு காண வலியுறுத்தி நேற்று முன்தினம் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார்கள். இதனால் பள்ளிகளில் சமையல் பணி பாதிக்கப்பட்டன. மாலையில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

இதைத்தொடர்ந்து நேற்று காலை 2–வது நாளாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் திரண்டு நின்று கோ‌ஷங்கள் எழுப்பியவாறு சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் பாக்கியம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ராமசாமி முன்னிலை வகித்தார். அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு மறியலில் ஈடுபட்டனர்.

உடனடியாக அங்கிருந்த திருப்பூர் தெற்கு போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அதன்படி 22 ஆண்கள் உள்பட 370 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் அனைவரையும் விடுதலை செய்தனர். இந்த சாலைமறியல் போராட்டத்தால் பல்லடம் ரோட்டில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும்பாலான பள்ளிகளில் சத்துணவு பணிகள் பாதிக்கப்பட்டன. அந்தந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் சமையல் செய்து மாணவ–மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கினார்கள். திருப்பூர் அரண்மனைப்புதூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், அங்கு படிக்கும் மாணவ–மாணவிகளின் பெற்றோர் வந்து சமையல் கொடுத்தனர். சில பள்ளிகளில் சத்துணவு ஊழியர்கள் சமையல் செய்தனர்.

காதர்பேட்டை மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் அந்த பள்ளி தலைமை ஆசிரியை மற்றும் ஆசிரியர்கள் சேர்ந்து மதிய உணவு தயார் செய்து மாணவ–மாணவிகளுக்கு பரிமாறினார்கள். இதுபோல் மேலும் பல பள்ளிகளில் ஆசிரியர்கள் சமையல் செய்து கொடுத்தார்கள். மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகளில் சமையல் பணிக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.


Next Story