பெற்றோர், உறவினர்கள் கைவிட்ட நிலையில் தங்கையை படிக்க வைக்க தன்னம்பிக்கையுடன் போராடும் இளைஞர் - கலெக்டர் பாராட்டு


பெற்றோர், உறவினர்கள் கைவிட்ட நிலையில் தங்கையை படிக்க வைக்க தன்னம்பிக்கையுடன் போராடும் இளைஞர் - கலெக்டர் பாராட்டு
x
தினத்தந்தி 31 Oct 2018 5:46 AM IST (Updated: 31 Oct 2018 5:46 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயத்தில் பெற்றோர், உறவினர்கள் கைவிட்ட நிலையில் தங்கையை படிக்கவைப்பதற்காக தன்னம்பிக்கையுடன் இளைஞர் அஜித்குமார் போராடி வருகிறார். அவருக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கி கலெக்டர் பாராட்டினார்.

திருப்பூர்,

குடும்ப தலைவன் சரியாக அமைந்தால் தான் ஒரு குடும்பம் முன்னேற்றப்பாதையில் செல்லும். குடும்ப தலைவன் திசைமாறும்போது அந்த பொறுப்பை மனைவி சுமந்து, தனது குழந்தைகளை நல்வழிப்படுத்துவதற்கு கடும்பாடுபட வேண்டும். ஆனால் கணவனும், மனைவியும் குழந்தைகளை கைவிட்டு விட்டால் அவர்களுடைய நிலை நிர்கதியாகிவிடும். உறவினர்கள் இருந்தால் பல சிரமங்களுக்கு மத்தியில் அவர்களை பராமரிப்பார்கள். ஆனால் சொந்தபந்தங்கள் அனைவரும் கைவிட்டபோதிலும் மனம் தளராமல் தனது தங்கைக்காக வாழ்ந்து வருகிறார் 22 வயதான இளைஞர் அஜித்குமார்.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் தாலுகா புலிமா நகரில் அஜித்குமார் கடந்த 4 ஆண்டுகளாக தனது தங்கையுடன் வசித்து வருகிறார். இவருடைய தங்கை விஷாலினி (வயது 16). இவள் காங்கேயம் அரசு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறாள். அஜித்குமார் அப்பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.

கடந்த 15 வருடத்துக்கு முன்பு அஜித்குமாரின் தந்தையும், தாயும் சண்டை போட்டு பிரிந்து சென்று விட்டார்கள். அவருடைய தாய் மனநலம் பாதிக்கப்பட்டு எங்கோ சென்று விட்டார். அதன்பிறகு அஜித்குமாரும், அவருடைய தங்கையும் தாத்தா, பாட்டியுடன் தங்கியிருந்து படித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தாத்தா இறந்து விட அதன்பிறகு கவனிப்பாரற்ற நிலை அஜித்குமாருக்கும், அவருடைய தங்கைக்கும் ஏற்பட்டது.

12–ம் வகுப்பு படித்து முடித்து ஈரோட்டில் உள்ள அரசு கல்லூரியில் அஜித்குமார் சேர்ந்து படிக்க தொடங்கினார். அவருடைய தங்கை காங்கேயத்தில் உள்ள விடுதியில் தங்கி அரசு பள்ளியில் படித்து வருகிறாள். அதன்பிறகு கல்லூரி படிப்பை தொடர முடியாமல் பாதியில் கைவிட்டு காங்கேயத்தில் உள்ள பனியன் நிறுவனத்தில் அஜித்குமார் தையல் தொழிலாளியாகிவிட்டார்.

இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுக்காக தங்கைக்கு பிறப்பு சான்றிதழ் தேவைப்பட அதற்காக அஜித்குமார் கடந்த 22–ந் தேதி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் மனு கொடுத்தார். மேலும் தங்களுக்கு புதிதாக ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்குமாறும் கேட்டார். அஜித்குமார், அவருடைய தங்கை இருவரின் பெயர் மட்டுமே இருப்பதை கண்டு ஆச்சரியமடைந்த கலெக்டர், அஜித்குமாரிடம் விவரம் கேட்க, தனது சோக கதையை கலெக்டரிடம் தெரிவித்துள்ளார்.

தான் தைத்து கொடுக்கும் ஆடைகளின் எண்ணிக்கை அடிப்படையில் கிடைக்கும் வருமானத்தில் தனது தங்கையை படிக்க வைப்பதாக கூறிய நிலையை அறிந்த கலெக்டர் நெகிழ்ந்துபோனார். உடனடியாக அஜித்குமாருக்கு புதிதாக ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்க உத்தரவிட்டார். மாவட்ட வழங்கல் அதிகாரி முருகன் பரிந்துரையின் பேரில் காங்கேயம் வட்ட வழங்கல் அதிகாரி பிரபு, அஜித்குமாரின் விண்ணப்பதை பெற்றார். பின்னர் சென்னையில் உயர் அதிகாரிகளின் ஒப்புதலுடன் அவருக்கு ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு அச்சிடப்பட்டது. கடந்த 29–ந் தேதி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அஜித்குமாரை வரவழைத்து ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி வழங்கியதுடன், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து இந்த சமுதாயத்தில் முன்னேற வேண்டும் என்று பாராட்டினார்.

இதுகுறித்து அஜித்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

சிறிய வயதில் எனது பெற்றோர் எங்களை விட்டு பிரிந்து விட்டனர். தாத்தா–பாட்டியுடன் வசித்து வந்தோம். தாத்தா மறைவுக்கு பிறகு எங்களை கவனிக்க யாரும் இல்லை. 12–ம் வகுப்பு முடித்த பின்னர் ஈரோட்டில் ஒரு செருப்பு கடையில் தங்கியிருந்து அங்குள்ள அரசு கல்லூரியில் 6 மாதம் படித்தேன். கிடைக்கும் வருமானத்தை வைத்து நானும், எனது தங்கையும் படிக்க முடியவில்லை. இதனால் கல்லூரி படிப்பை கைவிட்டு, காங்கேயம் திரும்பினேன். அங்குள்ள பனியன் நிறுவனத்தில் கைமடிக்கும் வேலைக்கு சேர்ந்து தையல் தொழிலாளியானேன். நண்பர்கள் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்தேன். கடந்த 4 ஆண்டுகளாக நானும், எனது தங்கையும் வீட்டில் வசிக்கிறோம். விடுதியில் தங்கி படிக்கும் எனது தங்கை சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் வீட்டுக்கு வருவாள்.

வாரம் ரூ.2 ஆயிரம் சம்பளம் எனக்கு கிடைக்கும். இப்போதைக்கு அதை வைத்து எனது தங்கையை படிக்க வைக்கிறேன். ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கிய கலெக்டருக்கும், அதிகாரிகளுக்கும் மிகுந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். தங்கைக்கு பிறப்பு சான்றிதழ் விரைவில் வழங்கி உதவ வேண்டும். வாழ்க்கையில் பல கஷ்டங்களை அனுபவித்து விட்டேன். தங்கையை படிக்க வைத்து சிறந்த ஆளாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி கூறும்போது, பெற்றோர், உறவினர் ஆதரவில்லாத இளைஞர் தான் வேலை செய்த சம்பளத்தை வைத்து தங்கையை படிக்க வைத்து வருகிறார். ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு அவருக்கு உடனடியாக வழங்கப்பட்டது. தற்போதைய காலகட்டத்தில் இளைஞர்கள் திசைமாறி செல்லும் வேளையில் இளைஞர் ஒருவர், தனது தங்கைக்காக வாழ்வது பாராட்டக்கூடியது. சிறுமியின் கல்வியை ஊக்கப்படுத்தும் வகையில் உதவித்தொகை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுபோல் அந்த இளைஞர் விரும்பினால் நல்ல நிறுவனத்தில் வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

பெற்றோரின் கழுகு பார்வை கண்காணிப்பில் இருக்கும் இளைஞர்களே திசைமாறி செல்லும் இந்த காலத்தில் பெற்றோர், உறவினர்கள் கைவிட்ட நிலையில் பனியன் நிறுவனத்துக்கு வேலைக்கு சென்று தனது தங்கையை படிக்க வைக்க போராடும் அஜித்குமார் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.


Next Story