பல முட்டுக்கட்டைகளை தாண்டி மக்களுக்காக இரவு பகலாக உழைக்கிறோம் - நாராயணசாமி பேச்சு


பல முட்டுக்கட்டைகளை தாண்டி மக்களுக்காக இரவு பகலாக உழைக்கிறோம் - நாராயணசாமி பேச்சு
x
தினத்தந்தி 31 Oct 2018 6:06 AM IST (Updated: 31 Oct 2018 6:06 AM IST)
t-max-icont-min-icon

பல முட்டுக்கட்டைகளை தாண்டி மக்கள் நலனுக்காக இரவு பகலாக உழைக்கிறோம் என்று காரைக்கால் மார்க் துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசினார்.

காரைக்கால்,

காரைக்கால் மார்க் துறைமுகம் கடந்த 2009-ம் ஆண்டு முதல், நிலக்கரி, சர்க்கரை, கோதுமை, சிமெண்டு, உரம் உள்ளிட்ட பொருட்களை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்து வருகிறது. நிலக்கரி இறக்குமதி, ஏற்றுமதியால், காரைக்கால், நாகூர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக புகார்கள் வந்தன. சிலர் துறைமுகத்துக்கு எதிராக போராட்டங்களும் நடத்தினர்.

இந்தநிலையில் மார்க் துறைமுகத்தில் ரூ.600 கோடி செலவில் சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிக்காத வகையில், மூடிய நிலையிலான கன்வேயர் எந்திரம் மூலம் நிலக்கரி இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பணியை செய்வதற்கு எந்திரம் அமைக்கப்பட்டது. இந்த எந்திரம் தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். அமைச்சர் கமலக்கண்ணன், எம்.எல்.ஏ.க்கள் கீதா ஆனந்தன், அசனா, மாவட்ட கலெக்டர் கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறைமுக இயக்குனர் ஜி.ஆர்.கே. ரெட்டி வரவேற்றார்.

முதல்-அமைச்சர் நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு புதிய கன்வேயர் எந்திரத்தை ரிமோட் மூலம் இயக்கி வைத்தார். பின்னர் நிலக்கரி இறக்குமதியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

இந்த துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக மக்கள் தொடர்ந்து புகார்கள் கூறி வந்தனர். இதனால் துறைமுகத்தில் வெளிநாடுகளில் உள்ள நவீன தொழில்நுட்பத்தை போல எந்திரங்களை இங்கு பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி வந்தேன். எனது கோரிக்கையை ஏற்று ரூ.600 கோடி செலவில் புதிய கன்வேயர் எந்திரம் அமைக்கப்பட்டது. இனிமேல் நிலக்கரி இறக்குமதி செய்யும் போது சுற்றுச்சூழல் பாதிப்பு நிச்சயம் ஏற்படாது.

விழாவில் பேசிய அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் துறைமுக தொழிலாளர்களுக்கு முறையான சம்பளம், உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை, துறைமுக நிர்வாகம் நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் மணல் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த பிரச்சினையை சரிசெய்ய துறைமுகம் மூலம் வெளிநாட்டில் இருந்து மணல் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

மக்கள் நலனுக்காக பல முட்டுக்கட்டைகளை தாண்டி இரவு பகலாக உழைத்து வருகிறோம். புதுச்சேரியின் 4 பிராந்தியங்களும் சமமான வளர்ச்சி அடைய வேண்டும் என்பதில் தனி கவனம் செலுத்தி வருகிறோம். மத்திய அரசு புதுச்சேரிக்கான நிதி ஆதாரத்தை குறைக்காமல் தாராளமாக வழங்க முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
1 More update

Next Story