சேத்தியாத்தோப்பு அருகே: பிரசவத்தில் தாய்-குழந்தை பலி - ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
சேத்தியாத்தோப்பு அருகே பிரசவத்தின் போது தாய், குழந்தை பலியாகினர். இதற்கு டாக்டர்கள் சிகிச்சை அளிக்காததே காரணம் என்று கூறி ஆரம்ப சுகாதார நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சேத்தியாத்தோப்பு,
சேத்தியாத்தோப்பு அருகே பரதூர்சாவடியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரமா (வயது 20). இவருக்கும் புவனகிரி அருகே அழிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்த ராஜா (26) என்பவருக்கும் கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. ராஜா புவனகிரியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு புதுமண தம்பதிகள் தங்களது வாழ்க்கையை இனிமையாக தொடங்கினர். இந்த நிலையில் ரமா கர்ப்பமானார். இதையடுத்து ரமா 5 மாத கர்ப்பிணியாக இருந்த போது, பிரசவத்திற்காக தனது தாய் வீடான பரதூர்சாவடிக்கு வந்துள்ளார். அங்கிருந்து அவ்வப்போது ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வந்தார். இவரை பரிசோதனை செய்து அங்குள்ள டாக்டர்கள் மருந்து மாத்திரைகள் வழங்கினர்.
இந்த நிலையில் கடந்த 26-ந்தேதி திடீரென ரமாவிற்கு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது குடும்பத்தினர் ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் இது பிரசவ வலி இல்லை என்றும், இன்னும் உங்களுக்கு பிரசவத்திற்கு நாட்கள் உள்ளது என்றும் கூறி அனுப்பி வைத்தனர்.
இந்த சமயத்தில் கடந்த 29-ந்தேதி இரவு ரமாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் சேர்க்கப்பட்டார். அங்கு பணியில் இருந்த டாக்டர்கள், பிரசவத்திற்கு நேரம் உள்ளது என்று கூறி மறுநாள் (30-ந்தேதி) மதியம் வரை சிகிச்சை அளிக்காமல் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென அங்கு பணியில் இருந்த டாக்டர், ரமாவை உடனே சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்க வேண்டும் என பரிந்துரை செய்தார். இதனை தொடர்ந்து அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்துச் சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் உடனடியாக ரமாவுக்கு ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று கூறினர்.
பின்னர் உறவினர்கள் சம்மதத்துடன் அங்கு ஆபரேஷன் நடந்தது. இதில் ரமாவுக்கு இறந்த நிலையில் ஆண் குழந்தை பிறந்தது. பிரசவத்திற்கு பிறகு ரமாவின் உடல்நிலை மோசமானது. தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் அவர் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனால் ரமாவின் பெற்றோர், கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் உரிய நேரத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் சிகிச்சை அளிக்காததால் தான் ராமவும், குழந்தையும் இறந்துவிட்டது என்று கூறி உறவினர்கள் ஆத்திரமடைந்தனர். தொடர்ந்து அவர்கள் ஒன்று திரண்டு நேற்று காலை ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது பற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இது குறித்து புகார் கொடுங்கள், உயர் அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் கூறினர். இதை ஏற்ற உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story