இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது திருமாவளவன் பேட்டி


இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது திருமாவளவன் பேட்டி
x
தினத்தந்தி 1 Nov 2018 4:30 AM IST (Updated: 1 Nov 2018 12:24 AM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடாது என்று திருமாவளவன் கூறினார்.

செந்துறை, 
அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த அங்கனூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தல் நடைபெற்றால் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறும் என்ற நிலை நிலவி வருகிறது. தமிழக அரசும், தேர்தல் ஆணையமும் சேர்ந்து திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய சட்டமன்ற இடைத்தேர்தலை தள்ளி வைத்தது போல, இந்த 18 தொகுதியின் இடைத்தேர்தலையும் தள்ளி வைக்க முயற்சி செய்யலாம்.

இடைத்தேர்தல் நடந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சி அதனை வரவேற்கும். ஆனால் அதில் போட்டியிடாது. தி.மு.க. எடுக்கும் முடிவுக்கு ஆதரவு தெரிவிக்கும். சர்தார் வல்லபாய் பட்டேல் இந்தியாவை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றியவர். இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் ஒருவேளை சோறு கூட இல்லாமல் வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள், சொந்த மனைகள் இல்லாமல் உள்ளனர். மின் வசதி மற்றும் சாலை வசதிகள் இல்லாத கிராமங்கள் உள்ளன. அப்படிப்பட்ட இந்த தேசத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு ரூ.3 ஆயிரம் கோடி செலவு செய்து, உலகிலேயே உயரமாக இப்படி ஒரு சிலை வைப்பது தேசத்தின் ஏழை எளிய மக்களை கேலி செய்வது போல் உள்ளது.

இது ஏழை, எளிய மக்களை அவமதிக்கும் செயலாகும். புலனாய்வு விசாரணையில் நிர்மலாதேவி அளித்த வாக்குமூலம் எப்படி வெளிச்சத்திற்கு வந்தது. இது ஒரு திட்டமிட்ட அதிகார வர்க்கத்தின் சதிச்செயலாக பார்க்க நேரிடுகிறது. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்கள் துணிந்து செய்யக்கூடிய குற்றங்களில், அடுத்தடுத்து நிலையில் உள்ள சாதாரண சாமானியர்களை பலி கொடுப்பது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கட்சியின் மாநில அமைப்பு செயலாளர் இளமாறன், அரியலூர் மாவட்ட செயலாளர் செல்வநம்பி உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story