பெரம்பலூரில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருட்டு மர்மநபருக்கு வலைவீச்சு


பெரம்பலூரில் கடைகளின் பூட்டை உடைத்து ரூ.60 ஆயிரம் திருட்டு மர்மநபருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 1 Nov 2018 4:30 AM IST (Updated: 1 Nov 2018 12:52 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் கடைகளின் பூட்டுகளை உடைத்து ரூ.60 ஆயிரத்தை திருடி சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பெரம்பலூர், 
திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்தவர் இளம்வழுதி. இவரது மனைவி அமுதா. இவர் பெரம்பலூர்-திருச்சி மெயின்ரோட்டில் துறைமங்கலம் பங்களா பஸ் நிறுத்தம் எதிரே மருந்து கடையை வாடகை கட்டிடத்தில் வைத்துள்ளார். அந்த கடையில் துறைமங்கலத்தை சேர்ந்த வேலுச்சாமி (வயது 54) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று காலை வேலுச்சாமி நடைப்பயிற்சிக்காக வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர் தான் வேலை பார்க்கும் கடையின் வழியாக சென்றபோது கடையின் ஷட்டரின் பூட்டுகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.

அப்போது கடையின் மேஜை டிராயரில் இருந்த ரூ.3 ஆயிரத்து 550 திருடு போயிருந்தது. இதே போல் அந்த மருந்து கடைக்கு அருகே பெரம்பலூர் அய்யலூர் குமரன் நகரை சேர்ந்த முத்துசாமியின் மகன் விஜயன்(33) என்பவர் மடிக்கணினி, கண்காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடை 2 அறைகளில் வைத்து நடத்தி வருகிறார். அவரது கடைகளின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. அந்த எலக்ட்ரானிக் கடைக்கு அருகே துறைமங்கலம் புதுக்காலனி 3-வது கிராசை சேர்ந்த தட்சிணாமூர்த்தி(42) என்பவரின் மருந்து கடையின் பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன.

இது குறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்த விஜயனும், தட்சிணாமூர்த்தியும் தங்களது கடைகளுக்கு விரைந்து வந்தனர். அப்போது தட்சிணாமூர்த்தி கடையின் ஷட்டரை திறந்து உள்ளே சென்று பார்த்த போது மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. டிராயரில் இருந்த ரூ.6 ஆயிரமும், பையில் இருந்த ரூ.49 ஆயிரம் என மொத்தம் ரூ.55 ஆயிரம் திருடு போயிருந்தது. தட்சிணாமூர்த்தி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளுக்கு மருந்துகளை மொத்தமாக விற்பனை செய்கிறார். அவ்வாறு கடைகளுக்கு மருந்துகளை விற்பனை செய்ததில் வசூலான தொகை ரூ.55 ஆயிரத்தை அவர் தனது மருந்து கடையில் வைத்திருந்தது திருடு போயிருந்தது.

எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடையின் ஒரு அறையில் இருந்த ரூ.100 மட்டும் திருடு போயிருந்தது. மற்றொரு அறையில் இருந்த விலை உயர்ந்த மடிக்கணினி ஒன்று திருடுபோயிருந்ததை கண்டு விஜயன் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். ஒரே நாளில் அடுத்தடுத்த கடைகளில் பூட்டுகள் உடைக்கப்பட்டு மொத்தம் ரூ.58 ஆயிரத்து 650-ம், ஒரு மடிக்கணினி திருடு போயிருந்த துணிகர சம்பவம் அந்த பகுதியில் வசிக்கும் மக்களிடையும், வணிகர்களிடையும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபரை தேடி வருகின்றனர்.


Next Story