திருவண்ணாமலையில்: சத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் - 700 பேர் கைது


திருவண்ணாமலையில்: சத்துணவு ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்து சாலை மறியல் - 700 பேர் கைது
x
தினத்தந்தி 1 Nov 2018 3:45 AM IST (Updated: 1 Nov 2018 1:16 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலையில் சத்துணவு ஊழியர்கள் 3-வது நாளாக சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். மறியலில் ஈடுபட்ட 700 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை,

சத்துணவு ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 25-ந் தேதி முதல் 27-ந் தேதி வரை காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் செய்தனர். அதைத் தொடர்ந்து கடந்த 29-ந் தேதி முதல் சத்துணவு ஊழியர்கள் அடுத்த கட்ட போராட்டமாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் நேற்று 3-வது நாளாக திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு மாவட்ட தலைவர் அல்போன்ஸ் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் பெரும்பாலான ஊழியர்கள் கருப்பு சட்டை அணிந்தும், கருப்பு பேட்ஜ் அணிந்தும் கலந்துகொண்டனர். மேலும் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென வேலூர் - போளூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். போக்குவரத்து பாதிக்காத வகையில் போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் கலெக்டர் அலுவலகம் வழியாக அனுப்பி வைத்தனர். கலெக்டர் அலுவலகம் வழியாக சென்ற வாகனங்கள் கோர்ட்டு வழியாக போளூர் சாலையை வந்தடைந்தது. இதனால் ஆத்திரமடைந்த சத்துணவு ஊழியர்கள் கோர்ட்டு சாலைக்கு சென்று பஸ்களை மறித்து மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டத்தின் போது அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க துணை போலீஸ் சூப்பிரண்டுகள் அண்ணாதுரை, செல்வி ஆகியோர் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மறியலில் ஈடுபட்ட சத்துணவு ஊழியர்களை போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் போலீசார் அடைத்தனர். இதில் சுமார் 700-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். 

Next Story