திருமணமான 6 மாதத்தில் பன்றி காய்ச்சலால் போலீஸ்காரர் பலி


திருமணமான 6 மாதத்தில் பன்றி காய்ச்சலால் போலீஸ்காரர் பலி
x
தினத்தந்தி 1 Nov 2018 5:15 AM IST (Updated: 1 Nov 2018 1:44 AM IST)
t-max-icont-min-icon

திருமணமான 6 மாதத்தில் பன்றி காய்ச்சலால் போலீஸ்காரர் பரிதாபமாக இறந்தார். 5 வயது சிறுவனும் மர்ம காய்ச்சலுக்கு பலியானான்.

ஆவடி,

சென்னையை அடுத்த ஆவடி சாந்தி நகர் பிரதான சாலையில் வசித்து வந்தவர் விஜய் (வயது 26). இவர், 2016-ம் ஆண்டு தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீசாக சேர்ந்தார். பின்னர் பூந்தமல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை 13-வது பட்டாலியனில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

இவருடைய மனைவி நர்மதா. இவர்களுக்கு திருமணமாகி 6 மாதங்களே ஆகிறது. கடந்த சில நாட்களாக விஜய், காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக கடந்த மாதம் 26-ந் தேதி முதல் விடுமுறை எடுத்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.

ஆனால் காய்ச்சல் குணமாகாமல் தொடர்ந்து அதிகமானது. இதையடுத்து மேல் சிகிச்சைக்காக கடந்த 29-ந் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்தபோது, அவருக்கு பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை போலீஸ்காரர் விஜய், மருத்துவமனையில் பரிதாபமாக இறந் தார்.

விஜயின் உடலை பார்த்து அவரது மனைவி நர்மதா கதறி அழுதார். விஜய் இறந்த துக்கம் தாங்காமல் அவருடைய குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கினர்.

சென்னை பெரம்பூர் வ.உ.சி. நகர் பிரதான சாலையில் உள்ள மதுரைசாமி மடத்தில் வசிப்பவர் வினோத் (வயது 30). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி மேரி (28). இவருக்கு கனிஷ்கா (6) என்ற மகள் உள்ளார்.

இவர்களுக்கு 5 வயதில் மித்ரன் என்ற மகனும் இருந்தான். இவன், அருகில் உள்ள அங்கன்வாடி பள்ளியில் படித்து வந்தான். மித்ரனுக்கு கடந்த 23-ந் தேதி மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மித்ரனை, அவரது பெற்றோர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர்.

ஆனால் காய்ச்சல் குணமாகாததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பித்தனர். நேற்று காலை மேலும் காய்ச்சல் அதிகமானதால் அவனை, எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி தனியார் மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்தனர்.

வினோத் தனது ஆட்டோவில் மித்ரனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு மித்ரனை பரிசோதித்த டாக்டர்கள், அவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மகனின் உடலை பார்த்து வினோத் மற்றும் அவரது மனைவி கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

வினோத் தனது மகனை பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்குள்ள டாக்டர்கள் சிறுவனை தொட்டுக்கூட பார்க்காமல் காய்ச்சல் என்று கூறி மாத்திரை மட்டுமே கொடுத்து அனுப்பியதாகவும், அரசு மருத்துவமனை டாக்டர்கள் சரியாக கவனிக்காததே சிறுவனின் உயிரிழப்புக்கு காரணம் என்றும் அவரது உறவினர்கள் புகார் தெரிவித்தனர்.

Next Story