டெங்கு காய்ச்சலால் சிறுவன், குழந்தை பாதிப்பு; திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஏராளமான நோயாளிகள் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
திருத்தணி,
திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் தினந்தோறும் ஏராளமான நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இந்தநிலையில் செம்பேடுவை சேர்ந்த செல்வராஜ் மகன் தினேஷ்குமார் (வயது 11) மற்றும் கே.ஜி.கண்டிகையை சேர்ந்த அமர்நாத் மகள் ஜோதிஷா (2) ஆகியோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 14 பெண்கள், 20 ஆண்கள் என்று 34 பேர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இது குறித்து அறிந்த திருத்தணி எம்.எல்.ஏ. பி.எம்.நரசிம்மன் நேற்று காலை திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் ஆய்வில் ஈடுபட்டு டெங்கு காய்ச்சல் மற்றும் மர்ம காய்ச்சலால் பாதிக்கப் பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மருத்துவ அலுவலர் ஹேமாவதியிடம் காய்ச்சலால் பாதிக்கபட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகளை சிறப்பாக வழங்க வேண்டும் என்று கூறினார். அப்போது அவருடன் ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினர், நகர அவைத்தலைவர் குப்புசாமி, முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவர் செல்வம் மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.