கணவருடன் சென்ற பெண்ணிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு ஹெல்மெட் அணிந்திருந்த நபர்கள் கைவரிசை
அதிகாலையில் கணவருடன் சென்ற பெண்ணிடம் ஹெல்மெட் அணிந்திருந்த நபர்கள் 6 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
திருச்சி,
திருச்சி உறையூர் பாளையம்பஜார் பகுதியை சேர்ந்தவர் செல்வமூர்த்தி(வயது 40). இவருடைய மனைவி காயத்திரி. செல்வமூர்த்தியின் தாயார் தில்லைநகரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவரை பார்த்துவிட்டு நேற்று அதிகாலை செல்வமூர்த்தியும், அவரது மனைவி காயத்திரியும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தனர்.
தில்லைநகர் 7-வது குறுக்குச்சாலை அருகே சென்றபோது, அவர்களுக்கு பின்னால் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்தபடி 2 பேர் வந்தனர். அதில் பின்னால் அமர்ந்து இருந்த நபர் காயத்திரி கழுத்தில் அணிந்து இருந்த 6 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். பின்னர் அங்கிருந்து அவர்கள் வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டி கொண்டு சென்றனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வமூர்த்தி மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அவர்களை விரட்டி சென்றார். ஆனால் அதற்குள் அவர்கள் தப்பி சென்று விட்டனர். இது குறித்து அவர் தில்லைநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story