திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு
திருச்சி விமான நிலையத்தில் பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
செம்பட்டு,
திருச்சி மாநகராட்சி மற்றும் விமான நிலையம் இணைந்து விமான நிலையத்தில் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மற்றும் கைகளில் உள்ள கிருமிகளை அளிக்கும் வகையில் கைகழுவும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி விமான நிலைய இயக்குனர் குணசேகரன், முனைய மேலாளர் சென் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விமானத்தில் வந்திறங்கிய பயணிகளுக்கு பன்றிக்காய்ச்சல் தடுப்பு முறை குறித்தும், கைகழுவும் விழிப்புணர்வு குறித்தும் துண்டுபிரசுரம் கொடுத்து விளக்கப்பட்டது. மாநகராட்சி மற்றும் விமான நிலைய அலுவலர்கள் மற்றும் நர்சிங் பள்ளி மாணவிகள், சுகாதார ஆய்வாளர் என 40-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கைகளை அடிக்கடி கழுவுதலால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், கிருமிகளில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் சோப்பு அல்லது வேதி பொருட்கள் மூலம் தயாரிக்கப்பட்ட பொருட்கள் கொண்டு, 15 முதல், 20 நொடிகள் வரை கைகளை கழுவினால் கிருமிகளைக் கொன்றுவிடும் என்றும், நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு விளக்கி சொல்லப்பட்டது.
விமான நிலைய இயக்குனர்குணசேகரன் கூறுகையில்,“திருச்சி விமான நிலையத்தில் 24 மணி நேரமும் மருத்துவக்குழு தயார் நிலையில் உள்ளது. பன்றிக்காய்ச்சல் உள்பட நோய் தொற்றுகள் கண்டறியப்பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்” என்றார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி நகர்நல அலுவலர் டாக்டர் ராஜேஸ்வரி, உதவி ஆணையர் தயாநிதி மற்றும் விமான நிலைய சுகாதார அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story