3 கொலைகளை செய்த ரவுடியின் கூட்டாளி கைது


3 கொலைகளை செய்த ரவுடியின் கூட்டாளி கைது
x
தினத்தந்தி 31 Oct 2018 11:45 PM GMT (Updated: 31 Oct 2018 9:07 PM GMT)

பிரபல ரவுடியின் சென்னை கூட்டாளியை போலீசார் கோட்டூர்புரம் ரெயில் நிலையம் அருகே அதிரடியாக சுற்றிவளைத்து கைது செய்தனர்.

அடையாறு,

திண்டுக்கல் சின்னாளபட்டியை சேர்ந்த பிரபல ரவுடி மோகன்ராம் என்பவர் மீது திண்டுக்கல், திருப்பூர், சென்னையில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் கடந்த 2016-ம் ஆண்டு கோவை மாவட்டம் சூலூர், சிந்தாமணிப்புதூரில் பழிக்குப் பழியாக மகாதேவன், தியாகராஜன், அருண் ஆகிய 3 பேரை துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்ததாக தெரிகிறது. இந்த வழக்கில் மும்பையில் தலைமறைவாக இருந்த மோகன்ராமை கோவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள தனது கூட்டாளி சீனிவாசன் என்ற யமகா சீனிவாசனிடம் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மயிலாப்பூர் துணை கமிஷனர் மயில்வாகன் உத்தரவின் பேரில், கடந்த 8-ந்தேதி கோட்டூர்புரம் பீலியம்மன் கோவில் தெருவில் உள்ள சீனிவாசனின் வீட்டிற்கு சென்று கோட்டூர்புரம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது சீனிவாசன் அங்கு இல்லை. அவரது மோட்டார் சைக்கிள் வீட்டில் நின்றது. அதனை போலீசார் சோதனைபோட்டபோது பெட்ரோல் டேங்கின் கீழ் புறம் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 27 தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தலைமறைவான சீனிவாசன் மீது ஏற்கனவே கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை பிடிக்க கோட்டூர்புரம் உதவி கமிஷனர் சுதர்சன் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் பொன் திலகராஜ், ராஜேஷ் கண்ணா மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் சீனிவாசனை தேடி வந்த நிலையில், அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், கோட்டூர்புரம் ரெயில் நிலையம் அருகே பதுங்கி இருந்த சீனிவாசனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சீனிவாசனிடம் இருந்து 4 தோட்டாக்கள், துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பும் மேகசின் 1, 31 செல்போன்கள் மற்றும் 37 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

பின்னர் சீனிவாசன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story