14 வயது சிறுமி கொடூரக்கொலை: சாகும் வரை கொலையாளியை சிறையில் அடைக்க வேண்டும் மாதர் சங்க மாநில தலைவி பேட்டி
14 வயது சிறுமியை கொடூரமாக கொலை செய்த கொலையாளியை சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும் என்று மாதர் சங்கத்தின் மாநில தலைவி வாலண்டினா தெரிவித்தார்.
சேலம்,
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி ராஜலட்சுமி தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த கொலையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், வழக்கை காலம் தாழ்த்தாமல் விரைந்து நடத்திட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே நேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் கலியபெருமாள் தலைமை தாங்கினார். மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் கொலை செய்யப்பட்ட மாணவியின் பெற்றோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்ட முடிவில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில தலைவர் வாலண்டினா நிருபர்களிடம் கூறியதாவது:-
14 வயது சிறுமியை அநியாயமாக தலையை துண்டித்து கொடூரமாக கொன்ற தினேஷ்குமாரை சாகும் வரை சிறையில் அடைக்க வேண்டும். அவர் ஜாமீனில் வெளியே வராதபடி போலீசார் நடவடிக்கை எடுப்பதுடன் வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். அவர் வெளியே வந்தால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புள்ளது.
முதல்-அமைச்சரின் சொந்த மாவட்டமான, சேலம் மாவட்டத்தில் தான் அதிகளவில் பாலியல் வன்முறைகள் நடக்கிறது. இதனை முதல்-அமைச்சர் கண்டுகொள்வதில்லை. மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் மாணவியின் வீட்டுக்கு சென்று பார்க்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது. அரசு வழங்கியிருக்கும் நிவாரணம் போதாது. அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொலை செய்யப்பட்ட மாணவியின் சகோதரி அருள்ஜோதி நிருபர்களிடம் கூறும் போது, ‘எனது தங்கை கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். எங்களுக்கு நிவாரணம் எல்லாம் தேவையில்லை. கொலையாளிக்கு விரைவில் தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கொலையாளி மனநிலை பாதிக்கப்பட்டவர் என்று போலீசார் கூறுவதால் அவர்கள் நடவடிக்கையில் சந்தேகம் எழுகிறது. இந்த கொலையில் வேறு சிலருக்கும் தொடர்பு இருப்பதால் அவர்களிடமும் போலீசார் விசாரிக்க வேண்டும்’ என்றார்.
Related Tags :
Next Story