பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 73 பேர் பாதிப்பு: சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல்
குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை துணைஇயக்குனர் மதுசூதனன் கூறினார்.
கன்னியாகுமரி,
குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி கன்னியாகுமரி பழைய பஸ் நிலையம் ஜங்ஷனில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி பஞ்சாயத்து செயல்அலுவலர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சுகாதார அதிகாரி முருகன் முன்னிலை வகித்தார் .
பொதுமக்களுக்கு பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை சுகாதாரத்துறை துணைஇயக்குனர் டாக்டர் மதுசூதனன் வழங்கினார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
குமரிமாவட்டத்தில் பன்றிக்காய்ச்சல் பரவலாக இருக்கிறது. இது ஒரு வைரஸ் மூலம் வேகமாக பரவும் தன்மை கொண்டது. இந்த காய்ச்சல் பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் முக்கியமாக கைகழுவும் பழக்கம் மிகவும் முக்கியம். இந்த வைரஸ் கையில் இருக்கும் போது முகத்தை துடைத்தாலும் வாய்வழியாக சென்று உடலை தாக்கும் தன்மை கொண்டது. எனவே நாம் கைகழுவும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
குமரி மாவட்டத்தில் இதுவரை 3 பேர் பன்றிக்காய்ச்சலால் இறந்துள்ளனர். குமரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு இதுவரை 73 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் லேசான பாதிப்பில் இருந்தவர்கள் சிகிச்சைக்கு பிறகு வீட்டுக்கு திரும்பி விட்டனர். தற்போது ஆஸ்பத்திரிகளில் 25 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story