இணையதள வசதி கேட்டு மடிக்கணினியை ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டம்
இணையதள வசதி கேட்டு மடிக்கணினியை ஒப்படைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
தமிழகத்தில் வருவாய்த்துறையில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு அரசு சார்பில் மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதை இயக்குவதற்கு இணையதள வசதி மற்றும் மின் இணைப்பு வசதி போன்றவை வழங்கப்படவில்லை என்றும், இதனால் வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பட்டா மாறுதல் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வழங்குவதற்கு தங்களது சொந்த செலவில் இணையதள சேவையை பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இது தொடர்பாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுவரை அவர்களுக்கு இணையதள சேவையை அரசு வழங்கவில்லை.
இந்தநிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தாலுகா அலுவலகம் முன்பு நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை ஒப்படைக்கும் போராட்டத்தை அறிவித்திருந்தனர். அதன்படி, சேலம் டவுன் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று கிராம நிர்வாக அலுவலர்கள் 18 பேர், தற்செயல் விடுப்பு எடுத்து தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை அங்கிருந்த அதிகாரிகளிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் வட்ட தலைவர் கலையரசன் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் சேலம் டவுனுக்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர். கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களது மடிக்கணினிகளை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்த சம்பவம் அங்கிருந்த ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாவட்ட தலைவர் மோகன்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-
அம்மா இ-சேவை மூலம் சாதி சான்றிதழ், வருமான சான்றிதழ், பட்டா மாறுதல், சிட்டா அடங்கல், குடியிருப்பு சான்றிதழ் உள்பட பல்வேறு சான்றிதழ்களை இணையதள வசதி இருந்தால் தான் நாங்கள் பரிந்துரை செய்ய முடியும். மடிக்கணினி மட்டும் வழங்கினால் போதுமா? அதை இயக்குவதற்கு இணையதள வசதி கிடையாது. தனியார் கணினி மையத்தில் சொந்த செலவில் இணையதள சான்றுகளை பரிந்துரை செய்து வருகிறோம். இதனால் எங்களுக்கு இழப்பு ஏற்படுகிறது. தற்போது அமல்படுத்தியுள்ள இ-அடங்கல் முறையிலும் பல்வேறு குளறுபடிகள் உள்ளன.
இதுதவிர, பழைய மாடல் மடிக்கணினி மற்றும் உரிய பயன்வழங்காத 2ஜி, 3ஜி சிம்கார்டுகளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. இதனால் அவற்றை தாசில்தாரிடம் ஒப்படைத்து எங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். இதற்கு பிறகும் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வருகிற 12-ந் தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டமும், 19-ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டமும் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே, எங்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல், சேலம் சூரமங்கலத்தில் உள்ள மேற்கு தாலுகா அலுவலகத்திலும், மணியனூரில் உள்ள தெற்கு தாலுகா அலுவலகத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினிகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story