4-ந்தேதி நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்வுக்கு 8 ஆயிரம் பேர் விண்ணப்பம்
4-ந்தேதி நடைபெறும் தேசிய திறனாய்வு தேர்வை எழுத 8 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். இந்த தேர்வு வருகிற 4-ந் தேதி நடக்கிறது. இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
கோவை,
தமிழகத்தில் கிராமப்புற பகுதிகளில் உள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இடை நிற்றலை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகளின் சார்பில் பல்வேறு போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மத்திய அரசு சார்பில், 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ஆண்டுதோறும் தேசிய திறன் வழி தேர்வு நடத்தப்படுகிறது.
அதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, 12-ம் வகுப்பு வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ.1,250 வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது. பிஎச்.டி., ஆராய்ச்சி படிப்புக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப் படும்.
நடப்பு கல்வி ஆண்டிற்கான தேசிய திறனாய்வு தேர்வு, அரசு தேர்வுகள் துறை சார்பில், வருகிற 4-ந் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு கோவை மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிகளில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவ- மாணவிகள் அந்தந்த பள்ளிகளிலேயே விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த தேர்வுக்கு விண்ணப்ப கட்டணமாக ரூ.50 செலுத்த வேண்டும். இதில் விண்ணப்பிக்கும் மாணவ- மாணவிகளின் பெற்றோர் அல்லது பாதுகாவலரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கும் மிகாமல் இருக்க வேண்டும். அதற்கு ஆதாரமாக வருவாய்த்துறையில் பெற்ற சான்றிதழை, விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்த தேர்வில் 9 மற்றும் 10-ம் வகுப்பு பாடத்திட்டத்தின்படி அறிவியல், சமூக அறிவியல் பாடங்களில் இருந்து 80 மதிப்பெண்கள், கணித பாடத்தில் இருந்து 20 மதிப்பெண்கள் என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு கேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வில் மாணவ- மாணவிகள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் கோவை மாநகரம், எஸ்.எஸ்.குளம், பேரூர், பொள்ளாச்சி ஆகிய கல்வி மாவட்டங்களில் 200 மாணவர்கள், 200 மாணவிகள் என மொத்தம் 400 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
இந்த தேர்வை எழுத கோவை மாவட்டத்தில் மொத்தம் 8 ஆயிரத்து 128 பேர் விண்ணப்பித்து உள்ளனர். தேர்வு எழுத கோவை நகர கல்வி மாவட்டத்தில் 10 மையங்களும், எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்தில் 7 மையங்களும், பேரூர் கல்வி மாவட்டத்தில் 6 மையங்களும், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 4 மையங்களும் என மொத்தம் 27 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story