தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்க கோவை டவுன்ஹால் பகுதியில் போக்குவரத்து மாற்றம் - இன்று முதல் அமல்
தீபாவளி கூட்ட நெரிசலை சமாளிக்கும் வகையில் கோவை டவுன்ஹால் பகுதியில் இன்று(வியாழக்கிழமை) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கோவை,
தீபாவளி பண்டிகை வருகிற 6-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஒப்பணக்கார வீதியில் பொதுமக்கள் அதிக அளவில் வந்து செல்வதால் இன்று(வியாழக்கிழமை)முதல் 5-ந் தேதி வரை போக்குவரத்தில் பின்வரும் மாற்றங்கள் செய்யப்பட்டு அமல்படுத்தப்பட உள்ளதாக மாநகர போலீசார் அறிவித்து உள்ளனர்.
அதன் விவரம் வருமாறு:-
பாலக்காடு சாலையில் இருந்து காந்திபுரம் செல்லும் அனைத்து பஸ்களும், உக்கடத்தில் இருந்து வாலாங்குளம் புறவழிச்சாலை வழியாக கிளாசிக் டவர், ரெயில் நிலையம் வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம். பாலக்காடு சாலையில் இருந்து பூமார்க்கெட், மேட்டுப்பாளையம் சாலை செல்லும் பஸ்கள் அனைத்தும் உக்கடத்தில் இருந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டி வீதி, காந்திபார்க் டி.பி.சாலை வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
அவினாசி சாலை, திருச்சி சாலை மற்றும் ரெயில் நிலையத்தில் இருந்து பேரூர் மார்க்கமாக ஈஷா யோகா மையம், காருண்யா செல்லும் பஸ்கள் அனைத்தும் மாற்று வழியில்(வைசியாள் வீதி செல்லாமல்) டவுன்ஹால் ராஜா தியேட்டர், உக்கடம் போலீஸ் நிலையம் வந்து வலது புறம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக சென்று சிவாலயா சந்திப்பு வழியாக செல்வபுரம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
ரெயில் நிலையத்திலிருந்து டவுன்ஹால் வழியாக காந்திபார்க் மற்றும் மேட்டுப்பாளையம் சாலை செல்லக்கூடிய பஸ்கள்(தடம் எண் 11, 21, 32) அனைத்தும் டவுன்ஹால் உக்கடம் வந்து பேரூர் புறவழிச்சாலை வழியாக செட்டி வீதி, சலீவன் வீதி, காந்திபார்க். டி.பி. ரோடு வழியாக சென்று மேட்டுப்பாளையம் சாலையை அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்லலாம்.
ஒப்பணக்காரவீதி, ராஜ வீதிகளில் உள்ள வணிக வளாகங்களில் பணிபுரியும் ஊழியர்களின் வாகனங்களை எந்த காரணத்தை கொண்டும் பொதுமக்கள் நிறுத்தும் இடங்களில் நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது இரண்டு சக்கர வாகனங்களை சோளக்கடை சந்திப்பில் உள்ள மாநகராட்சி நிறுத்துமிடத்திலும், மணிக்கூண்டு அருகில் உள்ள மாநகராட்சி வாகன நிறுத்துமிடத்திலும் நிறுத்திக் கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
ஒப்பணக்கார வீதியில் இடையர் வீதி வரை இருபுறமும் வாகனங்கள் நிறுத்தக் கூடாது. மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு மாநகர போலீசார் கூறி உள்ளனர்.
Related Tags :
Next Story