கணியாம்பூண்டியில் பன்றி காய்ச்சலுக்கு சிறுவன் பலி
திருப்பூர் கணியாம்பூண்டியில் பன்றி காய்ச்சலுக்கு சிறுவன் பலியானான். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அனுப்பர்பாளையம்,
திருப்பூர் மாவட்டம் கணியாம்பூண்டி பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி. கூலித்தொழிலாளி. இவருடைய மகன் நந்தகுமார் (வயது 7).இவன் கணியாம்பூண்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.
கடந்த சில நாட்களாக நந்தகுமார் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தான். இதற்காக அவன் அவினாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றான். அப்போது அவனது ரத்தத்தை பரிசோதனை செய்தபோது பன்றி காய்ச்சல் இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து நந்தகுமாருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவன் பரிதாபமாக இறந்தான். சிறுவன் நந்தகுமார் பன்றி காய்ச்சலுக்கு பலியானதை தொடர்ந்து கணியாம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை சார்பில் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்தனர்.
மேலும் தொடர் காய்ச்சல் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்து மாத்திரைகள் வழங்குவது உள்பட பல்வேறு சுகாதார பணிகளை சுகாதாரத்துறையினர் செய்து வருகிறார்கள். பன்றிக்காய்ச்சலுக்கு சிறுவன் பலியான சம்பவம் கணியாம்பூண்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story