இளமைப்பருவத்தில் இருந்தே மாணவர்கள் சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் - கலெக்டர் சிவஞானம்
மாணவர்கள் தங்கள் இளமைப்பருவத்தில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என கலெக்டர் சிவஞானம் கூறினார்.
விருதுநகர்,
சிறுசேமிப்புத் துறையின் மூலம் உலக சிக்கன நாள் விழாவை முன்னிட்டு சிக்கனத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில், மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற 14 மாணவ–மாணவிகளுக்கும், கட்டுரைப்போட்டியில் வெற்றி பெற்ற 12 மாணவ–மாணவிகளுக்கும், நாடகம், நடனப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் கலெக்டர் சிவஞானம் பரிசு, பாராட்டு சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:–
‘இன்றைய சேமிப்பு நாளைய வாழ்வின் பாதுகாப்பு“ என்பதற்கேற்ப எதிர்கால வாழ்க்கை ஒளிமயமாக திகழ்ந்திட ஒவ்வொரு குடிமக்களும் சேமிப்பு பழக்கத்தினை அவசியம் கடைபிடிக்க வேண்டும். அவ்வாறு சேமித்த தொகை பெருந்தொகையாகி அவசர காலங்களில் ஏற்படும் எதிர்பாரா செலவினங்களை மேற்கொள்ள உதவும். மக்கள் தங்கள் கடின உழைப்பால் ஈட்டிய செல்வத்தை தங்களது குடும்பத்திற்கு பயன்படும் வகையில் சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதால், அந்த தொகைக்கு உத்தரவாதமும், எதிர்கால வாழ்க்கைக்கு பாதுகாப்பும் கிடைக்கும். பொதுமக்கள் அனைவரும் தங்களது தேவைக்கு ஏற்றார்போல் சிக்கனமாக செலவு செய்ய வேண்டும்.
அன்றாட தேவைக்கு அதிகமாக கையில் பணத்தை வைத்திருக்காமல், அதனை வங்கியில் சேமிக்கலாம். பொதுமக்கள் வங்கிகளிலோ அல்லது தபால் நிலையங்களிலோ சேமிப்பதும் ஒரு பொது நல தொண்டு தான் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். மேலும் பொதுமக்கள் முதலில், எங்கெல்லாம் சேமிக்க வேண்டும் என்பது பற்றியும், எங்கெல்லாம் தேவைக்கு வாங்கலாம் என்பது பற்றியும் நன்கு தெரிந்து கொள்வது அவசியம். மேலும் பெற்றோர்கள் தாங்களும் சேமித்து, தங்களது பிள்ளைகளுக்கும் சிறுவயது முதலே சேமிக்கும் பண்பினை ஊட்டி வளர்த்திட வேண்டும்.
சிறுவயதிலேயே சேமிப்பு பழக்கம் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும், பெற்றோர்கள் மற்றும் சக மாணவ–மாணவிகளிடத்தில் சேமிப்பு பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவும் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்கள் இடையே பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, நடனப்போட்டி மற்றும் நாடகப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாணவர்கள் தங்கள் இளமைப்பருவத்தில் இருந்தே சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும். அஞ்சலக சேமிப்பு மூலம் நாட்டிற்கும், வீட்டிற்கும் நன்மை பயக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.