மதுரையில் அகமுடையார் சங்க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
மதுரை அனுப்பானடியில் உள்ள அகமுடையார் சங்க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இது தொடர்பாக போலீசார் 3 பேரை பிடித்து விசாரித்து வருகிறார்கள்.
மதுரை,
மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வருபவர் வெள்ளைச்சாமி. இவருடைய மகன் முத்துக்குமார்(வயது 35), தமிழ்நாடு அகமுடையார் சங்க மதுரை மாவட்ட செயலாளராகவும், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை விற்பனை செய்யும் தொழிலும் செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மதியம் மோட்டார் சைக்கிள்களில் சிலர் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்கள் திடீரென்று முத்துக்குமார் வீட்டின் முதல் மாடி, 2–வது மாடியின் மீது 2 பெட்ரோல் குண்டுகளை வீசினர். இதில் ஒரு குண்டு வெடித்து சுவரில் கீறல் விழுந்தது. மற்றொரு குண்டு சரியாக வெடிக்கவில்லை. அப்போது வீட்டின் வெளியே யாரும் இல்லாததால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. முன்னதாக குண்டு வெடித்ததால் ஏற்பட்ட சத்தத்தால் வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்ததும் உதவி கமிஷனர் பீர்முகைதீன் தலைமையில் அவனியாபுரம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் அந்த பகுதியில் சிதறி கிடந்த பாட்டில் துண்டுகளை சேகரித்தனர்.
தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் மோட்டார் சைக்கிளில் சிலர் சத்தம் போட்டு கொண்டே அந்த நேரத்தில் சென்றது தெரியவந்தது. அதை வைத்து போலீசார் அனைத்து சோதனை சாவடிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். அப்போது சிலைமான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், பிடிபட்ட நபர்களுக்கு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
என்ன காரணத்திற்காக முத்துக்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன என்பது குறித்து அவனியாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.