தெற்குவெளி வீதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்பு
மதுரை தெற்குவெளி வீதியில் ஆக்கிரமிப்பில் இருந்த மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டன.
மதுரை,
மதுரை தெற்குவெளி வீதி ஒண்டிமுத்து மேஸ்திரி தெருவில் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 20 சென்ட் இடம் உள்ளது. அந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து 2 தியேட்டர், கடைகள், வீடுகள் கட்டியுள்ளனர். பலகோடி ரூபாய் மதிப்புள்ள அந்த இடம் 1970–ம் ஆண்டில் இருந்து ஆக்கிரமிப்பில் உள்ளது. அதனை மீட்க கோவில் நிர்வாகம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் 1978–ம் ஆண்டு அந்த இடம் கோவிலுக்கு சொந்தமானது என்று தீர்ப்பு வெளிவந்தது. ஆனால் அதை எதிர்த்து ஐகோர்ட்டில் எதிர் தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கிலும் கோவிலுக்கு சாதகமான தீர்ப்பு கடந்த மாதம் வந்தது.
அந்த தீர்ப்பில் ஒரு மாதத்திற்குள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடங்களை கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால் ஆக்கிரமிப்பு செய்திருந்தவர்கள் அந்த இடத்தை காலி செய்யவில்லை. எனவே கோர்ட்டு உத்தரவின் படி அந்த இடத்தை மீட்க கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி கோவில் இடத்தை மீட்க கோர்ட்டு அமீனா, கோவில் இணை கமிஷனர் நடராஜன், தாசில்தார் செல்வராஜ், உதவி போலீஸ் கமிஷனர் முத்துகுமார், இன்ஸ்பெக்டர்கள் ரமணி, கணேசன் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர் நேற்று காலை அங்கு சென்றனர்.
அப்போது தியேட்டர்களின் கதவுகள் மூடப்பட்டிருந்ததால் கோர்ட்டில் அனுமதி பெற்று தான் அதனை திறக்க முடியும் என்று அமீனா தெரிவித்தார். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த 5 கடைகள் மற்றும் 3 வீடுகளை கோவில் நிர்வாகம் மீட்டது. அப்போது ஒரு வீட்டில் இருந்தவர் கோர்ட்டில் இருந்து எங்களுக்கு எவ்வித உத்தரவும் வழங்கவில்லை. அதற்காக கடிதத்தை எங்களிடம் காண்பியுங்கள் நாங்கள் வீட்டை காலி செய்கிறோம் என்று கூறினார். இதனால் வக்கீல்களுக்கும், வீட்டின் உரிமையாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் அவர் கதவை உள்ளே பூட்டி கொண்டு வீட்டிற்குள் சென்று விட்டார். இது தவிர வேறு சில வீடுகளும் பூடப்பட்டு இருந்தது. இதனால் அந்த வீடுகளை கோவில் நிர்வாகத்தால் மீட்க முடியவில்லை. ஆனால் பல ஆண்டுகளுக்கு பின்னர் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து மீட்கப்பட்ட 5 கடைகள், 3 வீடுகளை கோவில் ஊழியர்கள் அதிகாரிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தனர். அந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.