ஈரோடு பஸ்நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேர் கைது; பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்
ஈரோடு பஸ்நிலையம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு,
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வையாபுரி பட்டி சிறுமருதூர் பகுதியை சேர்ந்தவர் பி.சின்னு. இவருடைய மகன் சி.கங்காதரன் (வயது 27). ஈரோடு பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் இரவு நேர பணியில் இருந்தார். நேற்று அதிகாலையில் டீ குடிப்பதற்காக அலுவலகத்தில் இருந்து வெளியே சென்றார். பஸ் நிலையம் அருகே நாச்சியப்பா வீதியில் உள்ள டீக்கடைக்கு சென்ற அவர் அங்கு டீ குடித்து விட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டார். அவர் ஷேர் ஆட்டோ நிறுத்தம் பகுதியில் சென்றபோது அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேர் அவரை நோக்கி வேகமாக ஓடி வந்தனர். எனவே அச்சம் அடைந்த அவர் அங்கிருந்து மீண்டும் டீக்கடை இருக்கும் பகுதியை நோக்கி ஓடினார். ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்த பகுதிக்கு சென்றதும் மெதுவாக நடந்து சென்றார். ஆனால் பின்னால் துரத்தி வந்த 3 பேரும் வேகமாக வந்து கங்காதரனை தாக்கிவிட்டு கத்தியைக்காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் மற்றும் செல்போனை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்தனர். உடனடியாக அவர் சத்தம்போட்டார். அதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து 3 பேரில் ஒருவனை பிடித்தனர். 2 பேர் தப்பி ஓடினர். ஆனால் அங்கிருந்த பொதுமக்களில் சிலர் துரத்திச்சென்று அவர்களையும் பிடித்து வந்தனர். பின்னர் நாச்சியப்பா வீதியில் உள்ள ஒரு தனியார் விடுதி அருகே வைத்து அவர்களை விசாரித்தனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்து, ஈரோடு பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த 2 போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் பிடிபட்ட 3 பேரையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். பின்னர் 3 பேரையும் போலீசார் ஈரோடு டவுன் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு ஈரோடு டவுன் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றும் போலீசார் முறையாக விசாரித்தனர்.
அப்போது வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் ஈரோடு பெரியசேமூர் கொத்துக்காரர் தோட்டம் பகுதியை சேர்ந்த தர்மலிங்கம் என்பவருடைய மகன் தமிழ் என்கிற தமிழ்ச்செல்வன் (24), அதே பகுதியை சேர்ந்த கணேசன் என்பவருடைய மகன் கவுதம் (21), வீரப்பன்சத்திரத்தை சேர்ந்த பாண்டியராஜன் என்பவருடைய மகன் மணிகண்டன் (21) என்பது தெரியவந்தது. இதில் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பிடிபட்ட 3 பேரும் ஈரோடு பஸ்நிலையம் பகுதியில் தனியாக செல்பவர்களை பின்தொடர்ந்து சென்று தாக்கி பணம் மற்றும் செல்போன்களை தொடர்ச்சியாக கொள்ளையடித்து வந்ததும் தெரியவந்தது.
அதைத்தொடர்ந்து தமிழ்ச்செல்வன், கவுதம், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
ஈரோடு பஸ்நிலையத்துக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி ஏராளமானவர்கள் வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் பஸ்சில் இருந்து இறங்கி மேட்டூர் ரோடு, நாச்சியப்பா வீதி, சத்தி ரோடு வழியாகத்தான் பொதுமக்கள் செல்ல வேண்டும். இந்த பகுதிகளை குறிவைத்து வழிப்பறி திருடர்கள் தங்கள் கைவரிசையை காட்டி வருகிறார்கள். குறிப்பாக பஸ்நிலையத்தை ஒட்டி உள்ள டாஸ்மாக் கடைகள் நள்ளிரவை தாண்டியும் மூடப்படாமல் செயல்படுவதால், சுற்றுவட்டாரத்தில் உள்ள திருடர்கள் பலரும் இங்கு வந்து மது குடித்து விட்டு போதையில் ரகளை செய்வதுடன், திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். எனவே ஈரோடு பஸ்நிலையம் பகுதியில் கூடுதலாக போலீசாரை நியமித்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என்று அந்த பகுதியினர் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.