வில்லியனூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபான பாருக்கு ‘சீல்’
வில்லியனூரில் அனுமதியின்றி செயல்பட்டு வந்த மதுபானபாருக்கு கலால் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.
வில்லியனூர்,
புதுவை மாநிலம் வில்லியனூர் நகரின் மையபகுதியில் அன்பு என்பவருக்கு சொந்தமான நட்சத்திர அந்தஸ்துள்ள ஓட்டலில் உரிய அனுமதியின்றி மதுபான பார் செயல்படுவதாக கலால் துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.இதை தொடர்ந்து கலால் துறை துணை ஆணையர் தயாளன் உத்தரவின் பேரில் தாசில்தார் அருண் அய்யாவு தலைமையிலான அதிரடி படையினர் நேற்று இரவு அந்த ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினார்கள்.
அதிகாரிகள் சோதனை நடத்த வருவதை முன்கூட்டியே அறிந்த ஓட்டல் ஊழியர்கள் அந்த விடுதியின் கீழ்பகுதியில் செயல்பட்டு வந்த மதுபான பாரை அவசர அவசரமாக மூடிவிட்டு எதுவும் தெரியாதது போல் இருந்தனர்.இருந்தபோதிலும் கலால் துறையினர் தீவிர சோதனை நடத்தினார்கள். அப்போது பூட்டப்பட்டிருந்த அந்த அறையின் சாவியை தருமாறு ஓட்டல் ஊழியர்களிடம் கேட்டனர். அவர்கள் தயங்கியவாறே சாவியை அதிகாரிகளிடம் கொடுத்தனர்.
உடனே அதிகாரிகள் அந்த அறையை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு மதுபான பார் செயல்பட்டு வந்ததற்கான அடையாளங்கள் இருந்தன. அங்கிருந்த இருக்கைகள், மற்றும் மேசைகளில் மதுபாட்டில்கள், உணவு வகைகள், டம்ளர்கள், சிதறி கிடந்தன. மேலும் அங்கிருந்த அலமாரியில் விலை உயர்ந்த மதுபாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதை தொடர்ந்து அதிகாரிகள் அந்த மதுபான பாரின் இரு பக்கங்களிலும் உள்ள கதவை இழுத்து மூடி ‘சீல்’ வைத்தனர். ஓட்டல் உரிமையாளரை தொலை பேசியில் அதிகாரிகள் தொடர்பு கொண்ட போது எதிர்முனையில் பதில் எதுவும் இல்லை. இந்த சம்பவம் காரணமாக வில்லியனூர் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.