பிரதமர் மோடியின் ஏஜெண்டாக கவர்னர் கிரண்பெடி செயல்படுகிறார் - இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றச்சாட்டு
புதுவை கவர்னர் கிரண்பெடி பிரதமர் மோடியின் ஏஜெண்டாக உள்ளார், ரபேல் ஊழல் 5 மாநில தேர்தலில் எதிரொலிக்கும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
புதுச்சேரி,
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய நிர்வாகக்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.பி.யுமான அஜிஸ் பாஷா நேற்று புதுவையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது. சி.பி.ஐ.யில் அதிகாரம் யாருக்கு என்பதிலும் மோதல் ஏற்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் 20–ந் தேதி முதல் சி.பி.ஐ. இயக்குனரும், சிறப்பு இயக்குனரும் பேசிக்கொள்ளவில்லை. குஜராத்தை சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரியை சிறப்பு இயக்குனராக பிரதமர் மோடி கொண்டு வந்தார். அவர் மீது 6 வழக்குகள் இருப்பதால் அவருக்கு பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வழங்க வேண்டாம் என்று இயக்குனர் கேட்டுக்கொண்டார். குஜராத் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகளை மத்திய அரசின் அதிகாரத்திற்கு கொண்டு வருவதில் பிரதமர் மோடி குறியாக உள்ளார்.
பிரான்ஸ் அரசிடம் இருந்து ரபேல் போர் விமானம் வாங்குவதில் 95 சதவீத பணிகளை கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு முடித்திருந்தது. ஆனால் அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்து பிரதமர் மோடி புதிய ஒப்பந்தம் செய்துள்ளார். அனில் அம்பானி நிறுவனம் பயனடைய வேண்டும் என்பதற்காக இந்திய பொதுத்துறை நிறுவனத்தை சேர்க்காமல் அம்பானி நிறுவனத்தை அந்த ஒப்பந்தத்தில் சேர்த்தார். ரபேல் ஊழல் 5 மாநில தேர்தலில் எதிரொலிக்கும்.
தனியார் நிறுவனங்களின் வராக்கடன் ரூ.9லட்சத்து 60 ஆயிரம் கோடி இதுவரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க எஸ்.பி.ஐ. வங்கிக்கு ரூ.15 ஆயிரம் கோடி கடன் வழங்கும் படி நெருக்கடி கொடுத்துள்ளனர். மேலும் 21 பொதுத்துறை வங்கிகளில் ரூ.3லட்சத்து 10 ஆயிரம் கோடி வராக்கடனை தள்ளுபடி செய்யும் படி பா.ஜ.க. அரசு நெருக்கடி கொடுத்து வருகிறது.
மேலும் பா.ஜ.க.வினர் மற்றும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நெருக்கமான நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் படி எல்.ஐ.சி. மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு பிரதமர் மோடி நெருக்கடி கொடுத்து வருகிறார். பெட்ரோல் விலை இந்தியாவை விட அதைச் சுற்றியுள்ள நாடுகளில் குறைவான விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரியில் இரட்டை ஆட்சி நடைபெறுகிறது. அதிகாரிகள் முதல்–அமைச்சர் உத்தரவை கேட்டு செயல்படுவதா? கவர்னர் உத்தரவை ஏற்று செயல்படுவதா? என குழப்பத்தில் உள்ளனர். கவர்னர் கிரண்பெடி அதிகாரிகளை மிரட்டுகின்றார். பிரதமர் மோடியின் ஏஜெண்டாக அவர் உள்ளார். புதுச்சேரியை விட குறைவான மக்கள் தொகை கொண்டுள்ள மிசோரத்திற்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. இதே போல் புதுவைக்கும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும். இதில் கவர்னர் தனது கருத்தை தெரிவிக்க வேண்டும். மாநில அந்துஸ்து பெற்றால் தான் 15–வது நிதிக்குழுவில் புதுவையை சேர்க்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.