தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 1 Nov 2018 10:15 PM GMT (Updated: 1 Nov 2018 1:23 PM GMT)

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

கோவில்பட்டி,

தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி என்று செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

இதுகுறித்து அவர் கோவில்பட்டியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–

கின்னஸ் புத்தகத்தில்...

பிரிந்து கிடந்த 500–க்கு மேற்பட்ட சமாஸ்தானங்களை ஒருங்கிணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கியவர் இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல். அவருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, நாடு முழுவதும் விவசாயத்துக்கு பயன்படுத்திய 1½ லட்சம் டன் இரும்புகளை சேகரித்தும், 7 லட்சம் கிராமங்களில் இருந்து மண் சேகரித்தும், குஜராத்தில் ரூ.3 ஆயிரம் கோடி செலவில் 597 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான சர்தார் வல்லபாய் படேலின் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

உலகின் உயர்ந்த சிலையாக போற்றப்படுகின்ற இந்த சிலை விரைவில் கின்னஸ் புத்தகத்திலும் இடம்பெற உள்ளது. இந்த சிலை திறப்பு விழாவில் நானும் (அமைச்சர் கடம்பூர் ராஜூ), அமைச்சர் பாண்டியராஜனும் தமிழக அரசின் சார்பில் கலந்து கொண்டு பிரதமருக்கும், குஜராத் மாநில முதல்–மந்திரிக்கும் பாரத மாதா உருவ படத்துடன் கூடிய நினைவு பரிசு வழங்கினோம்.

அ.தி.மு.க. அமோக வெற்றி...

தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சியினரும் தாங்கள்தான் வெற்றி பெறுவோம் என்று கூறுவார்கள். 18 எம்.எல்.ஏ.க்கள் பிரச்சினை எங்களுக்கு ஒரு அனுபவம். தற்போது இடைத்தேர்தல் தேவை இல்லாமல் புகுத்தப்பட்டு உள்ளது. தேர்தலில் போட்டியிட அடிமட்ட தொண்டர்களுக்குதான் மறைந்த முதல்–அமைச்சர் ஜெயலலிதா வாய்ப்பு அளித்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்த 2 தொகுதிகளிலும் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், மாற்று கட்சியில் இருந்து அ.தி.மு.க.வுக்கு வந்தவர்கள்தான்.

இனி தெளிவாக இருப்போம். மாற்று கட்சியில் இருந்து வந்தவர்களுக்கும், மணல் கொள்ளையர்களுக்கும், தங்களது தொகுதிக்கு எதையும் செய்யாமல், தங்களுக்கே அனைத்தையும் செய்தவர்களுக்கு வாய்ப்பு அளிக்க மாட்டோம். முன்பு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தபோதே விளாத்திகுளம் தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அது எப்போதும் அ.தி.மு.க.வின் கோட்டைதான். அதேபோன்று ஓட்டப்பிடாரம் தொகுதியும் கடந்த 1996–ம் ஆண்டு நடந்த தேர்தலை தவிர, மற்ற அனைத்து தேர்தலிலும் அ.தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினரே போட்டியிட்டு வென்றுள்ளனர். விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் தொகுதிகளில் எண்ணற்ற நலத்திட்ட பணிகளை செய்துள்ளோம். அந்த 2 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள்.

சிறைக்கு செல்வது உறுதி

லோக் ஆயுக்தா விரைவில் அமைக்கப்படும். அதன் மூலம் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் அத்தனை பேரும் விரைவில் சிறைக்கு செல்வது உறுதி. அதேபோன்று கொளத்தூர் தொகுதியில் தேர்தல் விதிமீறல் வழக்கில் தி.மு.க. தலைவர் ஸ்டாலினை தகுதி இழப்பு செய்யும் நிலையும் ஏற்படலாம். புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை கண்டு தி.மு.க.வினர் அஞ்சுகின்றனர். அந்த வழக்கில் ஸ்டாலின் சிறை செல்லும் நிலை உருவாகலாம்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.


Next Story