திருவாரூரில் கொட்டும் மழையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
திருவாரூரில் கொட்டும் மழையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். ஓய்வு பெறும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு முழுமையான பணப்பலன்களை வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்ப உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் மாவட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் கடந்த 25-ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வேலை நிறுத்த போராட்டத்தையொட்டி கடந்த 3 நாட்களாக சத்துணவு ஊழியர்கள் சங்கம் சார்பில் திருவாரூரில் சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த நிலையில் நேற்று மாவட்டத்தில் உள்ள ஒன்றிய அலுவலகங்கள் முன்பு சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருவாரூரில் உள்ள ஒன்றிய அலுவலகம் முன்பு சத்துணவு ஊழியர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஒன்றிய தலைவர் மங்கையர்கரசி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விஜயா முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொருளாளர் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது சத்துணவு ஊழியர்கள் கொட்டும் மழையில் குடை பிடித்தபடி நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் ஒன்றிய பொருளாளர் சகிலா நன்றி கூறினார்.
வலங்கைமான் ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சத்துணவு ஊழியர்கள் சங்க வட்ட தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வீரையன், வட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராஜேஸ்வரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட இணை செயலாளர் தனபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் அரசு ஊழியர் சங்க வட்ட செயலாளர் சுகுமார், ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நீடாமங்கலத்தில் சத்துணவு ஊழியர்கள் சங்க வட்ட தலைவர் கரிகாலன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் சங்க மாவட்ட துணை தலைவர் தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் ஆறுமுகம், வட்ட தலைவர் இளமாறன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகையன், மாநில செயற்குழு உறுப்பினர் லதா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story