குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் போலீஸ்காரர் - ஊழியர் மோதல் நடவடிக்கை எடுக்கக்கோரி செவிலியர்கள் போராட்டம்


குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் போலீஸ்காரர் - ஊழியர் மோதல் நடவடிக்கை எடுக்கக்கோரி செவிலியர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 1 Nov 2018 11:36 PM IST (Updated: 2 Nov 2018 5:15 AM IST)
t-max-icont-min-icon

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் போலீஸ்காரர் - ஊழியர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை கண்டித்தும் நடவடிக்கை எடுக்கக்கோரியும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குடியாத்தம், 

குடியாத்தம் தாலுகா காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் குமார். இவர், தனது 4 வயது பெண் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் நேற்று முன்தினம் நள்ளிரவு 1 மணி அளவில் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன் வந்துள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் நடராஜன் மாத்திரை கொடுத்துள்ளார். இதனையடுத்து குமாருக்கும், ஊழியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அங்கு வந்த செவிலியர், மருத்துவமனை காவலாளி கோவிந்தராஜ் ஆகியோருக்கும் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அங்கு வந்த குமாரின் உறவினர்கள் நடராஜனை தாக்கியும், பணியில் இருந்த செவிலியர்களை தரக்குறைவாகவும் பேசி உள்ளனர்.

தள்ளுமுள்ளுவில் நடராஜனுக்கு தலை மற்றும் முகத்திலும், குமாருக்கு கையிலும் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகர போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் காவலாளி கோவிந்தராஜை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். காயம் அடைந்த நடராஜன், குமார் ஆகியோர் அதே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் இதனை கண்டித்தும், இரவு பணியின் போது அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் மருத்துவ பணிகள் மாவட்ட இணை இயக்குனர் யாஸ்மின், தாசில்தார் பி.எஸ்.கோபி, மருத்துவ அலுவலர் கே.கார்த்திகேயன், ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம், இன்ஸ்பெக்டர்கள் இருதயராஜ், செங்குட்டுவன், அ.தி.மு.க. நகர செயலாளர் ஜெ.கே.என்.பழனி, தமிழ்நாடு அரசு செவிலியர் சங்கத்தின் மாநில துணை செயலாளர் விஜயலட்சுமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து மருத்துவனை செவிலியர்கள் மற்றும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

சுமார் 2 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் பணிக்கு திரும்பினர்.

இந்த சம்பவத்தால் குடியாத்தம் அரசு மருத்துவமனை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story