டெங்கு கொசு உருவாகும் காரணிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு


டெங்கு கொசு உருவாகும் காரணிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
x
தினத்தந்தி 1 Nov 2018 10:45 PM GMT (Updated: 1 Nov 2018 6:45 PM GMT)

டெங்கு கொசு உருவாகும் காரணிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார்.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை நகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு கொசு உருவாகும் காரணிகளை அழிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியின் போது நகராட்சி பணியாளர்கள் அனைத்து பகுதிகளிலும் உள்ள குப்பைகள், பிளாஸ்டிக் கப்புகள், தேங்காய் மட்டை, டயர் உள்ளிட்ட பொருட்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை நகராட்சி சார்பில் புதுக்கோட்டை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் கணேஷ் ஆய்வு செய்தார். அப்போது அவர், கொசு மருந்து அடித்தல், அபேட் மருந்து தெளித்தல், சாக்கடைகளில் மருந்து அடித்தல், தனிநபர் வீடுகளுக்கு சென்று டெங்கு கொசு உருவாகும் காரணிகளை கண்டறிந்து அழித்தல் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.

அப்போது புதுக்கோட்டை நகர் பகுதிகளில் தினமும் காலை மற்றும் மாலை ஆகிய இருவேளைகளில் கொசு மருந்து அடிக்க வேண்டும். தனிநபர் இல்லங்களில் டெங்கு கொசு உருவாகும் லார்வா புழுக்களை கண்டறியும் பணியை மேற்கொண்டு டெங்கு கொசு உருவாகும் காரணிகளை முற்றிலும் அழிக்க வேண்டும் என நகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். ஆய்வின் போது நகராட்சி ஆணையர் (பொறுப்பு) சுப்பிரமணியன், அரசு போக்குவரத்து கழக பொதுமேலாளர் சுப்பு, வணிக மேலாளர் பாலசுப்பிரமணியன், துப்புரவு ஆய்வாளர் பரக்கத்துல்லா உள்பட நகராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Next Story