கல்லூரி மாணவி பாலியல் புகார்: மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சாட்சிகளிடம் ரகசிய விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு
கல்லூரி மாணவி பாலியல் புகார் தொடர்பாக மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் சாட்சிகளிடம் ரகசிய விசாரணை நடத்த மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையை அடுத்த வாழவச்சனூரில் அரசு வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் உள்ளது. இங்கு சென்னையை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். அவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் மீது புகார் கூறினார். மேலும் இதற்கு விடுதி காப்பாளர்களான 2 உதவி பேராசிரியைகள் உடந்தையாக இருந்ததாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2 உதவி பேராசிரியைகள் வேறு கல்லூரிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். பாலியல் புகார் கூறிய மாணவியை கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் திருச்சி வேளாண்மை கல்லூரிக்கு மாற்றம் செய்தது. ஆனால் திருச்சி கல்லூரிக்கு மாற்றம் செய்த ஆணையை அந்த மாணவி ஏற்கவில்லை. தனக்கு நியாயம் கிடைக்கும் வரை போராடுவேன் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் அந்த மாணவியை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்தது.
இந்த நிலையில் பாலியல் புகாருக்கு ஆளான அந்த மாணவி அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், உதவி பேராசிரியர் தங்கபாண்டியன், விடுதி காப்பாளர்களான 2 உதவி பேராசிரியைகள் மற்றும் 2 மாணவிகள் என 6 பேர் மீது போலீசார் மானபங்கம், கொலை மிரட்டல், அவதுறாக பேசியது என்பது உள்பட 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் இந்த சம்பவம் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதால் இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி மகிழேந்தி முன்னிலையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி, தன்னிடம் விடுதி காப்பாளர்களாக இருந்த 2 உதவி பேராசிரியைகள் பேசிய ஆடியோ பதிவு உள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிவித்து இருந்தார். இந்த ஆடியோ பதிவு உள்ள செல்போன் மற்றும் சி.டி. கைப்பற்றப்பட்டு உள்ளது. இதில் 12 ஆடியோ பதிவுகள் உள்ளன. இதனை குரல் மாதிரி சோதனைக்காக சென்னை மைலாப்பூரில் உள்ள தடயவியல் மையத்திற்கும், பின்னர் ஐதராபாத்தில் உள்ள தடயவியல் மையத்திற்கும் அனுப்பி வைக்கப்பட உள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் மாணவிக்காக சாட்சியம் அளித்த மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட 10 பேரிடம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ரகசிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டு உள்ளது. விசாரணை அறிக்கை வந்த பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு விரைவில் விசாரணை தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது சார்பு நீதிபதி ராஜ்மோகன் உடனிருந்தார்.
Related Tags :
Next Story