காட்டுயானையை வேட்டையாடி தந்தங்கள் கடத்தல்: தலைமறைவாக இருந்த 2 பேர் கைது
காட்டு யானையை வேட்டையாடி தந்தங்களை கடத்திய வழக்கில், தலைமறைவாக இருந்த 2 பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
கோத்தகிரி,
கோத்தகிரி வனச்சரகத்திற்கு உட்பட்ட கல்லூர் காப்புக்காடு அருகே வாட்டர் பால்ஸ் பகுதியில் கடந்த 2015-ம் ஆண்டு காட்டுயானையை வேட்டையாடி தந்தங்களை மர்ம ஆசாமிகள் கடத்தி சென்றனர். இதுகுறித்த தகவலின்பேரில் கோத்தகிரி வனச்சரகர் சீனிவாசன் தலைமையிலான வனத்துறையினர் விசாரணை நடத்தினர். அதில் தேனி மாவட்டம் வருசநாடு அருகே தர்மராஜபுரத்தை சேர்ந்த பிச்சை குட்டி என்பவரது மகன் சிங்கம்(வயது 35) மற்றும் தும்மகுண்டு கிராமத்தை சேர்ந்த பாலுசாமி மகன் நாகு என்ற குபேந்திரன்(வயது 40) ஆகியோரை வனத்துறையினர் கைது செய்தனர். அதன்பின்னர் அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இது தொடர்பான வழக்கு கோத்தகிரி கோர்ட்டில் கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் ஆஜராகாமல் குற்றவாளிகள் 2 பேரும் தலைமறைவாக இருந்து வந்தனர். மேலும் அவர்கள் மீது சீகூர், சிறுமுகை, மேட்டுப்பாளையம் மற்றும் கோலாம்பட்டி வனச்சரகங்களிலும் காட்டுயானை தந்தங்களை கடத்தியது தொடர்பான வழக்குகள் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வழக்குகளிலும் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால் சிங்கம், குபேந்திரன் ஆகியோரை பிடிக்க மேட்டுப்பாளையம் கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து இருந்தது.
இந்த நிலையில் கோத்தகிரி வனத்துறையினர் அவர்கள் 2 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று முன்தினம் கோத்தகிரி கோர்ட்டில் நடைபெற்று வரும் வழக்கில் ஆஜராக தங்களது வக்கீலுடன் சிங்கம், குபேந்திரன் ஆகியோர் வந்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த அவர்களை மேட்டுப்பாளையம் கோர்ட்டு பிறப்பித்த பிடிவாரண்டு உத்தரவின்படி கோத்தகிரி வனத்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் 2 பேரும் குன்னூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story