5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கொட்டும் மழையில் சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் சத்துணவு ஊழியர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர்,
சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும், சட்ட ரீதியான ஓய்வூதியமும் அரசு வழங்க வேண்டும். சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.5 லட்சமும், சமையல் உதவியாளர்களுக்கு ரூ.3 லட்சமும் பணிக்கொடை வழங்க வேண்டும். ஒரு மாணவருக்கு உணவு கட்டணமாக ரூ.5 தர வேண்டும். காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் மாநில அளவில் கடந்த மாதம் 25-ந்தேதி முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை நடத்தினர்.
ஆனால், அவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாததால் கடந்த 29-ந் தேதி முதல் 31-ந்தேதி வரை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் மாவட்டத்திலும் சத்துணவு ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் மற்றும் சாலை மறியல் செய்தனர்.
சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து அதன் சங்க நிர்வாகிகளை அழைத்து அரசு தரப்பில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் உடன்பாடு எதுவும் எட்டப்படாததால் நேற்று முன்தினம் பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே சத்துணவு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆனாலும் சத்துணவு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை. இதனால், நேற்றும் சத்துணவு ஊழியர்கள் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ஆனந்தராசு தலைமை தாங்கினார். அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சத் துணவு ஊழியர்கள் கையில் குடை பிடித்தவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங் களை எழுப்பினர்.
Related Tags :
Next Story