புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பள்ளிகளுக்கு விடுமுறை


புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பள்ளிகளுக்கு விடுமுறை
x
தினத்தந்தி 2 Nov 2018 10:30 PM GMT (Updated: 2 Nov 2018 8:51 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

புதுக்கோட்டை, 
புதுக்கோட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக புதுக்கோட்டையில் தாழ்வான பகுதிகளான திலகர் திடல், பொது அலுவலக வளாகம், தற்காலிக பஸ் நிலையம், பால் பண்ணை ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது. மேலும் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, கந்தர்வகோட்டை, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, இலுப்பூர், அன்னவாசல், கீரனுர், பொன்னமராவதி உள்பட பல்வேறு பகுதிகளில் நேற்று அதிகாலை முதல் பலத்த மழை பெய்ததால், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேற்று ஒருநாள் விடுமுறை அறிவித்து கலெக்டர் கணேஷ் உத்தரவிட்டார். ஆனால் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட வில்லை.

மேலும் புதுக்கோட்டையில் உள்ள வாரச்சந்தையில் நேற்று பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. இதனால் வாரச்சந்தை சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. இதனால் வியாபாரிகள் மற்றும் வாரச்சந்தைக்கு காய்கறி, பழங்கள் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் பின்வருமாறு:-

புதுக்கோட்டை-4, ஆதனக்கோட்டை-8, பெருங்களூர் -7.40, ஆலங்குடி -13.40, கந்தர்வகோட்டை -8.20, கறம்பக்குடி -16, மழையூர் -15.60, கீழாநிலைக்கோட்டை -8.20, திருமயம் -2.60, அரிமளம் -1, அறந்தாங்கி -11, ஆயிங்குடி -8.40, நாகுடி -12, மீமிசல் -29.20, ஆவுடையார்கோவில் -15.20, மணமேல்குடி -38, கட்டுமாவடி- 34, இலுப்பூர் -1, அன்னவாசல் -2, உடையாளிப்பட்டி -2, கீரனூர் -2, பொன்னமராவதி- 6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.


Next Story