ஆற்றில் கலக்கும் ரசாயன கலவையால் விளை நிலங்கள் பாதிப்பு அதிகாரியிடம் விவசாயிகள் மனு


ஆற்றில் கலக்கும் ரசாயன கலவையால் விளை நிலங்கள் பாதிப்பு அதிகாரியிடம் விவசாயிகள் மனு
x
தினத்தந்தி 3 Nov 2018 4:30 AM IST (Updated: 3 Nov 2018 2:28 AM IST)
t-max-icont-min-icon

ஆற்றில் கலக்கும் ரசாயன கலவையால் விளை நிலங்கள் பாதிக்கப்படுவதாக அதிகாரியிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

குளித்தலை, 

குளித்தலை தென்கரை, கட்டளை மேட்டு வாய்க்கால், காவிரி தென்கரை பாசன விவசாயிகள் பலர் நேற்று முன்தினம் குளித்தலை ஆற்றுப்பாதுகாப்பு உட்கோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்திருந்தனர். இதுகுறித்து கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

கரூர் மாவட்டம் மாயனூர் தடுப்பணையில் இருந்து திறந்துவிடப்படும் தண்ணீர் தென்கரை மற்றும் கட்டளைமேட்டு வாய்க்கால்களின் மூலம் பல்வேறு கிராமப்பகுதிக்கு செல்கிறது. இந்த வாய்க்கால் தண்ணீரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காவிரி ஆற்றில் செல்லும் தண்ணீர் மிகவும் பச்சை நிறத்துடன் காணப்படுகிறது. இந்த தண்ணீர் மாயனூர் தடுப்பணையில் இருந்து வாய்க்கால்களின் வழியாக செல்கிறது. இந்த தண்ணீரை விவசாயத்திற்கு பயன்படுத்துவதால் பயிர்கள் அழுகிவருகிறது. தண்ணீரில் ரசாயனக் கலவை கலந்துவருகிறது. அதிக பச்சை நிறமாக காணப்படும் இந்த தண்ணீரை நிலத்தில் பாய்ச்சிய பின்னர் ஊதா நிறம்போன்ற படிவுகள் நிலத்தில் படிந்துவிடுகிறது. இதனால் நிலத்தின் தன்மை மாறிவிடுகிறது.

தொடர்ச்சியாக இந்த தண்ணீரை பயன்படுத்தினால் விளை நிலங்கள் முழுமையாக பாதிக்கப்பட்டு எந்த பயிரையும் பயிரிடமுடியாத சூழ்நிலை ஏற்படும். இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும். எனவே ரசாயன கலவை தண்ணீரை வாய்க்கால்களில் திறந்துவிடாமல் ஆற்றிலேயே செல்லுமாறு செய்வதோடு, எங்கிருந்து ஆற்றில் இந்த ரசாயனக்கலவை கலந்துவிடப்படுகிறது என்பதை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்யவேண்டும் என்று மனு அளிக்க வந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து நேற்று முன்தினம் குளித்தலைக்கு வந்த திருச்சி ஆற்றுப்பாதுகாப்புக் கோட்ட செயற்பொறியாளர் பாஸ்கரிடம் தங்கள் கோரிக்கை குறித்த மனுவை விவசாயிகள் வழங்கினர். இதற்கு பதிலளித்த அதிகாரிகள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுக்கும் தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்கள்.

Next Story