தீபாவளிக்கு ஊருக்கு வர மனைவி மறுத்ததால்: தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை


தீபாவளிக்கு ஊருக்கு வர மனைவி மறுத்ததால்: தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 Nov 2018 10:00 PM GMT (Updated: 2 Nov 2018 11:04 PM GMT)

தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வர மனைவி மறுத்ததால் மனமுடைந்த தையல் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பல்லடம், 

பல்லடம் அருகே உள்ள அருள்புரம் உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் செந்தில் (வயது 30). இவரது மனைவி உஷாராணி (29). இவர்களுக்கு 9 மாத குழந்தை உள்ளது. செந்தில் அந்த பகுதியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

செந்திலின் பெற்றோரான குணசேகரன்-ஜெயலட்சுமி ஆகியோர் வேதாரண்யத்தில் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் செந்திலின் பெற்றோர் தீபாவளி பண்டிகைக்கு செந்திலை குடும்பத்துடன் வேதாரண்யம் வரும்படி அழைத்துள்ளனர்.

அதன்படி செந்திலும் பெற்றோரை பார்க்க ஊருக்கு செல்ல நினைத்தார். இது பற்றி தனது மனைவி உஷாராணியிடம் தெரிவித்தார். ஆனால் அவர் 9 மாத குழந்தையை எடுத்துக்கொண்டு அவ்வளவு தூரம் செல்வது சிரமம் என்று கூறியதாக தெரிகிறது. இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த செந்தில் வீட்டின் அருகில் இருந்த மரத்தில் மனைவியின் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பல்லடம்போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் பல்லடம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து செந்திலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இது தொடர்பாக பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story