மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை: குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு
x
தினத்தந்தி 4 Nov 2018 3:30 AM IST (Updated: 3 Nov 2018 5:21 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தால் குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. களக்காட்டில் பெய்த மழை காரணமாக தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது

நெல்லை,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தால் குற்றாலத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. களக்காட்டில் பெய்த மழை காரணமாக தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கனமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நேற்று காலை குற்றாலம் அருவிகளில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயின் அருவியில் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் கொட்டியது.

இதேபோல் ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, இந்த அருவிகளில் குளிப்பது ஆபத்து என்பதால் நேற்று காலை 6 மணி முதல், சுற்றுலா பயணிகள் குளிக்க குற்றாலம் போலீசார் தடை விதித்தனர்.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

யாரும் அருவிக்கு செல்லாமல் இருக்க கயிறு கட்டி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தற்போது சீசன் இல்லாததால் சுற்றுலா பயணிகள் சிலரே குற்றாலத்திற்கு வந்திருந்தனர். அவர்கள் தடை விதிக்கப்பட்ட 3 அருவிகளிலும் குளிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் புலியருவி, சிற்றருவிகளில் அவர்கள் குளித்து சென்றனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

சேரன்மாதேவி, அம்பை, பாபநாசம், மணிமுத்தாறு. வள்ளியூர், ஆய்குடி, தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் நேற்று காலை பலத்த மழை பெய்தது. நெல்லை, பாளையங்கோட்டை பகுதிகளில் சாரல் மழை தூறிக்கொண்டே இருந்தது. மேலப்பாளையம், பாளையங்கோட்டை பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் குளம்போல் தேங்கி நின்றது.

தரைப்பாலங்கள் மூழ்கின

களக்காடு பகுதியில் நேற்று முன்தினம் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதனால் களக்காட்டில் ஓடுகின்ற பச்சையாறு, உப்பாறு, நாங்குநேரியான் கால்வாய்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக சிதம்பரபுரம் செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலமும், வனத்துறை அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள மூங்கிலடி தரைப்பாலமும் தண்ணீரில் மூழ்கின.

இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. களக்காட்டில் பாலம் கட்டும் பணி நடந்து வருவதால், களக்காடு– நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் சிதம்பரபுரம் வழியாக சென்று வந்தன. இந்த நிலையில் தரைப்பாலம் மூழ்கியதால் அந்த வழியாக களக்காடு–நாகர்கோவில் செல்லும் வாகனங்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன. கீழகருவேலங்குளம் கீழப்பத்தை தரைப்பாலத்தையும் வெள்ளம் மூழ்கடித்தது. இதனால் அந்த வழியாகவும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பச்சையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் கீழ வடகரை பாலமும், பத்மநேரி நடைபாலமும் சேதமடைந்தது.

தலையணை

களக்காடு தலையணையில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்து உள்ளனர்.

பச்சையாற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையொட்டி தருவை அருகே உள்ள திடீயூர் தமிழாக்குறிச்சியில் பச்சையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணை உடைந்தது. இதனால் அந்த வெள்ளம் தாமிரபரணி ஆற்றில் வந்து கலந்தது. இதன் காரணமாக அந்த பகுதியிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இட்டமொழி, பரப்பாடி, வடக்குவிஜயநாராயணம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய மழை பெய்தது. இட்டமொழி ஊரணிகுளம் நிரம்பி மறுகால் சென்றது. இதனால் வண்ணான்குளம் நிரம்பியது.

அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

பாபநாசம் அணை பகுதியில் 160 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் அந்த அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. பாபநாசம் அணையில் நேற்று முன்தினம் 99.05 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று ஒரே நாளில் 6 அடி உயர்ந்து 105.06 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 748 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு 604.75 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

சேர்வலாறு அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் 110.56 அடியாக இருந்தது. மழையால் நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று காலையில் இந்த அணையின் நீர்மட்டம் 112.43 அடியாக உயர்ந்தது.

மணிமுத்தாறு அணை

மணிமுத்தாறு அணை பகுதியில் 286 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதனால் நேற்று முன்தினம் 86.10 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், நேற்று காலை 89.40 அடியாக உயர்ந்தது. அணைக்கு வினாடிக்கு 2 ஆயிரத்து 877 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. கடனாநதி அணையின் நீர்மட்டம் 67.80 அடியாகவும், ராமநதி அணை 62 அடியாகவும், கருப்பாநதி அணை 69.36 அடியாகவும், வடக்கு பச்சையாறு அணை 21.50 அடியாகவும், அடவிநயினார் அணை 108.75 அடியாகவும், நம்பியாறு அணை 22.53 அடியாகவும் நீர்மட்டம் உள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் இந்த அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

36.10 அடி கொள்ளளவு கொண்ட குண்டாறு அணை நிரம்பி விட்டது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.

மழை அளவு

நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்) வருமாறு:–

மணிமுத்தாறு–286, பாபநாசம்–160, நம்பியாறு–125, கல்லிடைக்குறிச்சி–86, சேர்வலாறு–60, கொடுமுடியாறு–60, சேரன்மாதேவி–60, நாங்குநேரி–57, ராதாபுரம்–40, செங்கோட்டை–40, குண்டாறு–31, ராமநதி–30, கடனாநதி–27, தென்காசி–22, பாளையங்கோட்டை–11.2, ஆய்குடி–10.4, நெல்லை–9.6, சிவகிரி–9, கருப்பாநதி–8, அடவிநயினார்–7.


Next Story