நெல்லிக்குப்பம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணி தீவிரம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை


நெல்லிக்குப்பம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணி தீவிரம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 3 Nov 2018 10:30 PM GMT (Updated: 3 Nov 2018 8:58 PM GMT)

நெல்லிக்குப்பம் பகுதியில் மரவள்ளிக்கிழங்கு அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. அதன் விலை வீழ்ச்சியடைந்து இருப்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

நெல்லிக்குப்பம், 
நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் விவசாயத்தையே சார்ந்து உள்ளனர். தற்போது மேல்பட்டாம்பாக்கம், அண்ணாகிராமம், பாலூர், நடுவீரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்திருந்தனர்.

தற்போது, இவை நன்கு வளர்ந்து இருந்தது. இந்த நிலையில் தற்போது பருவமழை தொடங்கி இருப்பதால், மரவள்ளி கிழங்கு அறுவடை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. ஆனால் கடந்த ஆண்டை விட மரவள்ளி கிழங்கு விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், பருவமழை தொடங்கி இருப்பதால், மரவள்ளி கிழங்கு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் மரவள்ளிக்கிழங்கு ஜவ்வரிசி, மைதா போன்றவை தயார் செய்வதற்காக சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு லாரிகள் மூலம் ஏற்றி அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது ஒரு கிலோ கிழங்கு ரூ.4 முதல் 5 வரைக்கும் விற்பனையாகிறது. ஆனால் கடந்த ஆண்டில் ஒரு கிலோ ரூ.14 முதல் 15 வரைக்கும் விற்பனையானது. குறைந்த விலை கொடுத்தே , வியாபாரிகள் எங்களிடம் இருந்து வாங்கி செல்கிறார்கள். எனவே நடப்பு ஆண்டில் மரவள்ளி பயிர்செய்துள்ள விவசாயிகள் அனைவரும் கடுமையான நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். 10 மாத பயிரான மரவள்ளி பயிருக்கு நாங்கள் பராமரிப்புக்கு செய்த செலவு பணம் கூட கிடைக்காமல் போய்விடும் நிலை ஏற்பட்டுள்ளது. விலை உயரும் போது, அறுவடை செய்து விற்கலாம் என்று நினைத்தாலும் பருவமழை தொடங்கி உள்ளதால், நிலத்தில் தண்ணீர் தேங்கி கிழங்கு அழுகிவிடும். எனவே வேறு வழியில்லாமல் தற்போது அவசரகதியில், கிடைத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறோம் என்று கவலையுடன் தெரிவித்தார்.

Next Story