திருச்செங்கோடு பகுதியில் ரூ.8.34 கோடியில் வளர்ச்சிப்பணிகள் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்


திருச்செங்கோடு பகுதியில் ரூ.8.34 கோடியில் வளர்ச்சிப்பணிகள் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 4 Nov 2018 4:30 AM IST (Updated: 4 Nov 2018 3:35 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோடு பகுதியில் ரூ.8.34 கோடியில் புதிய வளர்ச்சித்திட்டப் பணிகளை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

திருச்செங்கோடு,

திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் புதிய வளர்ச்சித்திட்ட பணிகளுக்கு பூமிபூஜை நிகழ்ச்சி மற்றும் திறப்பு விழா நிகழ்ச்சி மாவட்ட வருவாய் அலுவலர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினர் பொன்.சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சிகளில் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியம் மற்றும் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாடு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம், பொதுநிதி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், ஒருங்கிணைக்கப்பட்ட ஒப்படைக்கப்பட்ட வருவாய் நிதி திட்டம், தாய் திட்டம் மற்றும் தன்னிறைவு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.8.34 கோடி மதிப்பீட்டில் தார்சாலை, சிமெண்டு சாலை, மேல்நிலை தொட்டி, ரேஷன்கடை கட்டிடம், மழைநீர் வடிகால் வசதி, ஊராட்சி அலுவலக கட்டிட பணிகளை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

பின்னர் அமைச்சர், ரூ.1.86 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையக்கட்டிடம், கிராம பஞ்சாயத்து சேவை மையம், ரேஷன் கடை, கூடுதல் வகுப்பறை கட்டிடம், பஸ் நிறுத்தம், அம்மா பார்க் மற்றும் அம்மா ஜிம் உள்ளிட்டவைகளை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, திருச்செங்கோடு உதவி கலெக்டர் பாஸ்கரன், திருச்செங்கோடு நகராட்சி ஆணையாளர் மகேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் டேவிட் அமில்ராஜ் உள்பட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் முன்னாள் பிரதிநிதிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Next Story