இடைத்தேர்தலில் தொகுதிக்கு ரூ.200 கோடி செலவழிக்க அ.தி.மு.க. திட்டம் - தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு


இடைத்தேர்தலில் தொகுதிக்கு ரூ.200 கோடி செலவழிக்க அ.தி.மு.க. திட்டம் - தங்கதமிழ்செல்வன் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Nov 2018 4:30 AM IST (Updated: 4 Nov 2018 3:51 AM IST)
t-max-icont-min-icon

ஊழல் செய்த பணத்தில் இடைத்தேர்தலின்போது தொகுதிக்கு ரூ.200 கோடி வீதம் செலவழிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக தங்கதமிழ்செல்வன் பேசினார்.

ஆண்டிப்பட்டி,

ஊழல் செய்த பணத்தில் இடைத்தேர்தலின்போது தொகுதிக்கு ரூ.200 கோடி வீதம் செலவழிக்க அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளதாக ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் பேசினார்.

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் வருகிற 10-ந்தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு அந்த கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற அ.ம.மு.க. கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் பேசியதாவது:-

ஊழல் செய்த பணத்தில் தொகுதிக்கு ரூ.200 கோடி வீதம் 20 தொகுதிகளுக்கு ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்து இடைத்தேர்தலில் வெற்றிபெற அ.தி.மு.க. திட்டமிட்டுள்ளது. மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடித்து மக்களுக்கே லஞ்சமாக கொடுக்க உள்ளனர். அந்த பணத்தை மக்கள் பெற்றுக்கொண்டு ஓட்டை எங்களுக்கு அளியுங்கள். மக்கள் செல்வாக்கில் அ.ம.மு.க. 20 தொகுதிகளிலும் வெற்றிபெறும். ஆண்டிப்பட்டியில் மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து வருகிற 10-ந்தேதி அ.ம.மு.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட உள்ளது.

ஆண்டிப்பட்டி தொகுதிக்கு உட்பட்ட குமுளியில் பஸ் நிறுத்தம் அமைக்க ரூ.3 கோடியில் திட்ட மதிப்பீடு செய்து அனுப்பியும், எனது தொகுதி என்பதால் நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டு விட்டனர். தொகுதியில் பல கிராமங்களில் குடிநீர் வசதி, வடிகால் வசதி இல்லை. இவைகளை முன்வைத்து நடக்க உள்ள உண்ணாவிரத போராட்டத்தில் அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளர் தினகரனும் பங்கேற்பார். தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்.எல்.ஏ.க்களின் தொகுதி உள்பட 20 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் வர உள்ளது. இதில் ஒரு ஓட்டுக்கு அ.தி.மு.க. ரூ.10 ஆயிரம் தர இருப்பதாக தகவல் வந்துள்ளது.

தமிழகத்தில் ஊழல் இல்லாத ஆட்சியை இனி தினகரனால் மட்டுமே தரமுடியும். ஆட்சி மாற்றம் வரும் என்பதால் இடைத்தேர்தல் நடத்துவதை தாமதப்படுத்துகின்றனர். பொதுவாக தேர்தல் என்றாலே ஆளும் அ.தி.மு.க. அரசுக்கு மரண பயம் ஏற்பட்டுவிடுகிறது. எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலோடு 20 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை நடத்துவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளது.

மக்களுக்கு விரோதமாக செயல்படும் மத்திய அரசை எடப்பாடி அரசு இதுவரை எதிர்க்கவில்லை. அ.ம.மு.க.வில் துணை பொதுச்செயலாளருக்கும், நிர்வாகிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏதும் இல்லை. தற்போதும் ஒன்றாகவே உள்ளோம் என்று பேசினார்.

இந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு, ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story