தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் அலைமோதிய மக்கள் கூட்டம்


தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்பட்டியில் அலைமோதிய மக்கள் கூட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 5:19 PM GMT)

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோவில்பட்டி பஜாரில் மக்கள் கூட்டம் அலைமோதியது. ஜவுளி, பலசரக்கு கடைகளில் வியாபாரம் களை கட்டி காணப்பட்டது.

கோவில்பட்டி,

தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நேற்று கோவில்பட்டி தினசரி மார்க்கெட், மெயின் ரோடு, தெற்கு பஜார் உள்ளிட்ட பஜார் பகுதிகளில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது. சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கானோர் கோவில்பட்டியில் குவிந்து காணப்பட்டனர்.

காய்கறிகள், மளிகை பொருட்கள், பலகாரங்கள், புதிய துணிகள், பட்டாசுகள் போன்றவற்றை பொதுமக்கள் அதிகளவில் வாங்கி சென்றனர். ஜவுளி கடைகள், பலசரக்கு கடைகள், நகை கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதனால் கோவில்பட்டியில் தீபாவளி வியாபாரம் களை கட்டியது.

மேலும், சுற்றுப்புறங்களில் இருந்து பஸ்களில் அதிக அளவில் மக்கள் வந்ததால், நெரிசல் காணப்பட்டது. கார்கள், வேன்கள் போன்றவற்றிலும் மக்கள் குவிந்ததால் கோவில்பட்டி ரோடுகளில் போக்குவரத்து நெரிசல் இருந்தது.

கோவில்பட்டி மெயின் ரோட்டில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில், ஒரு வழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ் தலைமையில், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பவுல்ராஜ் (கிழக்கு), விநாயகம் (மேற்கு) மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

Next Story