நாற்காலி வாங்குவது போல் நடித்து பர்னிச்சர் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்


நாற்காலி வாங்குவது போல் நடித்து பர்னிச்சர் கடையில் ரூ.2 லட்சம் திருட்டு 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்
x
தினத்தந்தி 4 Nov 2018 11:15 PM GMT (Updated: 4 Nov 2018 5:38 PM GMT)

திருப்பூரில் நாற்காலி வாங்குவது போல் நடித்து பர்னிச்சர் கடையில் ரூ.2 லட்சம் திருடிய 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

திருப்பூர், 
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

திருப்பூர் பட்டுக்கோட்டையார் நகரை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 50). இவர் ஆர்.வி.இ. லே-அவுட் பகுதியில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 2-ந் தேதி காலை சக்திவேல் கடையில் இருந்தார். அப்போது 35 வயது மதிக்கத்தக்க 2 பேர் நாற்காலி வாங்குவதற்காக சக்திவேலின் கடைக்கு வந்துள்ளனர். அதில் ஒரு நபர் ரூ.2 ஆயிரத்தை கொடுத்து சில்லரை கேட்டுள்ளார். உடனே சக்திவேல் கடையில் இருந்த பீரோவை திறந்து சில்லரை எடுத்துக்கொடுத்து விட்டு பீரோவை மூடாமல் அப்படியே வந்துள்ளார்.

பின்னர் மற்றொருவர் நாற்காலி பார்ப்பது போல் சக்திவேலிடம் பேச்சுக்கொடுத்துள்ளார். அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, ஏற்கனவே சில்லரை வாங்கிய அந்த ஆசாமி, பீரோவை திறந்து அதில் இருந்த பணத்தை திருடினார். அதன்பிறகு 2 பேரும் ‘நாற்காலியை எடுத்து வையுங்கள். ஆட்டோவுக்கு சொல்லிவிட்டு வந்து வாங்கிக்கொள்கிறோம்’ என்று கூறி மோட்டார் சைக்கிளில் ஏறி சென்று விட்டனர். பின்னர் கடைக்கு அவர்கள் வரவில்லை.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சக்திவேல், தனது கடையில் பொருத்தியிருந்த ரகசிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை பார்த்தார். அப்போது சக்திவேலின் கவனத்தை திசை திருப்பி பீரோவில் உள்ள பணத்தை அவர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. அதன்பிறகே சக்திவேலுக்கு பணம் திருட்டு போனது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 10 ஆயிரத்தை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். குற்றப்பிரிவு போலீசார் சக்திவேலின் பர்னிச்சர் கடைக்கு சென்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றினார்கள். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Next Story