குறைந்த ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடியுங்கள் கலெக்டர் வேண்டுகோள்


குறைந்த ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடியுங்கள் கலெக்டர் வேண்டுகோள்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:30 PM GMT (Updated: 4 Nov 2018 6:01 PM GMT)

குறைந்த ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடியுங்கள் என்று கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி பண்டிகை ஒரு ஒளி திருநாளாகும். தீபாவளி பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் பட்டாசுகளை வெடிப்பதால் எழும் ஓசை தற்காலிக செவிட்டு தன்மையை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே, தீபாவளி பண்டிகையின்போது நமது கவன குறைவாலும், அலட்சியத்தாலும், விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கவும் அதிக சத்தம் எழுப்பும் பட்டாசுகளை தவிர்த்து, விபத்தில்லா மற்றும் மாசில்லா தீபாவளி பண்டிகையை அனைவருடைய ஒத்துழைப்போடும் கொண்டாட வேண்டும் காலை 6 மணி முதல் 7 மணி வரை மற்றும் இரவு 7மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும். மற்ற நேரங்களில் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.

பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசு வெடிப்பதற்கு, அந்த அந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம். அதிக ஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கலாம். மருத்துவமனைகள், வழிபாட்டு தலங்கள், கோர்ட்டுகள், கல்வி நிறுவனங்கள் போன்ற அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுமதிக்காதீர்கள், பெரியவர்கள் உடன் இருப்பது அவசியம். பட்டாசு வெடிப்பதற்கு முன்பாக பாத்திரங்களில் தண்ணீர், மணல் போன்றவற்றை தயாராக வைத்து கொள்ளுங்கள்.

விபத்து மற்றும் மாசில்லா தீபாவளியின் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆகியன இணைந்து, இது குறித்ததான விளக்க பிரதிகளை வெளியிட்டு உள்ளன. இவற்றை பொதுமக்கள் அனைவரும் முறையாக பின்பற்றி, திருவள்ளுர் மாவட்டம் முழுவதும் விபத்து மற்றும் மாசில்லா தீபாவளி பண்டிகையை கொண்டாடுமாறு அன்புடன் கேட்டு கொண்டு, திருவள்ளுர் மாவட்ட பொதுமக்களுக்கு தீபாவளி திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுளளது.

Next Story