சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி
சேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த டெல்லியை சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
சூரமங்கலம்,
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் அம்மாபாளையம் மாரியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் நேற்று முன்தினம் வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் வெளியூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். மதியம் 3 மணியளவில் அவரது வீட்டின் அருகே மர்ம ஆசாமிகள் 3 பேர் வந்தனர்.
பின்னர் அவர்கள் எந்தவித பயமுமின்றி பட்டப்பகலில் சீனிவாசன் வீட்டு கதவின் பூட்டை உடைத்தனர். இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்தனர். அதற்குள் மர்ம ஆசாமிகள் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். அந்த சமயத்தில் பொதுமக்கள் வந்ததும் அவர்கள் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயற்சி செய்தனர். இதைத்தொடர்ந்து உடனே அங்கிருந்தவர்கள் அவர்களை விரட்டி சென்றனர். 2 பேரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். ஒருவர் தப்பியோடி விட்டார். பிடிபட்ட இருவருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.
இதையறிந்த சூரமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது. போலீசார் வருவதற்குள் பிடிபட்டவர்களில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் போலீசார் வந்து பிடிபட்ட நபரை பொதுமக்களிடம் இருந்து மீட்டு விசாரணை நடத்தினர். இதில் அவர் டெல்லியை சேர்ந்த ரமேஷ் (35) என்பது தெரியவந்தது. இதையடுத்து ரமேசை போலீசார் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story