பெற்றோர் கடைவீதிக்கு சென்று இருந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் குழந்தைகள் பட்டாசுகளை வெடித்ததால் தீ விபத்து


பெற்றோர் கடைவீதிக்கு சென்று இருந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் குழந்தைகள் பட்டாசுகளை வெடித்ததால் தீ விபத்து
x
தினத்தந்தி 5 Nov 2018 4:30 AM IST (Updated: 5 Nov 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

பெற்றோர் கடைவீதிக்கு சென்று இருந்த நிலையில் பூட்டிய வீட்டுக்குள் குழந்தைகள் பட்டாசுகளை வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது.

மலைக்கோட்டை,

திருச்சி மலைக்கோட்டை பாபுரோடு மேலகாசிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம்(வயது 40). இவருக்கு சொந்தமாக அந்த பகுதியில் ஒரே வளாகத்தில் 4 வீடுகள் உள்ளன. அவற்றை வாடகைக்கு விட்டுள்ளார். இதில் ஒரு வீட்டில் அப்துல்கரீம்(39) தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வருகிறார். சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்து ஓட்டி வரும் அவர் தீபாவளி பண்டிகையையொட்டி வீட்டில் பட்டாசுகளை வாங்கி வைத்து இருந்தார். அப்துல்கரீமும், அவரது மனைவியும் வெளியே செல்லும்போது, அவர்களது குழந்தைகள் அப்துல்ரஷீத்(5), ரகுமான்(3) ஆகியோர் வீட்டில் இருந்து வெளியே செல்லாமல் இருக்க வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு செல்வது வழக்கம்.

நேற்று காலை கணவன், மனைவி இருவரும் கடையில் பொருட்களை வாங்க கடைவீதிக்கு புறப்பட்டனர். வழக்கம்போல் 2 குழந்தைகளையும் வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றனர். வீட்டுக்குள் விளையாடி கொண்டு இருந்த குழந்தைகள் வீட்டில் இருந்த பட்டாசுகளில் மத்தாப்பு ஒன்றை எடுத்து பற்ற வைத்தனர்.

அப்போது அதில் இருந்து வெளியேறிய தீப்பொறி வீட்டில் தொங்க விடப்பட்டு இருந்த துணிகளில் பிடித்தது. இதனால் தீ மள, மளவென வீட்டில் இருந்த பொருட்கள் மற்றும் பட்டாசுகளில் பிடித்து எரிந்தது. வீடு முழுவதும் தீப்பற்றி எரிந்த நிலையில் குழந்தைகள் இருவரும் உள்ளே சிக்கி கொண்டு வெளியே வர முடியாமல் கதறி அழுதனர்.

வீடு பூட்டப்பட்டு இருந்ததால் குழந்தைகளின் சத்தம் வெளியே கேட்கவில்லை. சிறிதுநேரத்தில் வீட்டுக்குள் இருந்து கரும்புகை வெளியேறுவதை கண்டு அக்கம் பக்கம் உள்ளவர்கள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருந்ததோடு, வீட்டினுள் குழந்தைகள் அப்துல்ரஷீத், ரகுமான் ஆகியோரது அழுகை சத்தம் கேட்டதால் அதிர்ச்சி அடைந்தனர். உடனே இது பற்றி தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் வருவதற்குள் இளைஞர்கள் சிலர் தாமதிக்காமல் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 2 குழந்தைகளையும் காப்பாற்றி உயிருடன் வெளியே கொண்டு வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த அப்துல்கரீமும், அவரது மனைவியும் அங்கு விரைந்து வந்தனர். உயிர் தப்பிய தங்கள் குழந்தைகளை கண்ட அவர்கள் 2 குழந்தைகளையும் கட்டி பிடித்து அழுத காட்சி நெஞ்சை உருக்கியது. இதற்கிடையே திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்பு நிலையத்தில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வாகனத்தில் அங்கு சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். அதற்குள் பாதி வீடு எரிந்தது. வீட்டில் இருந்த டி.வி. மற்றும் மின்சாதன பொருட்கள், துணிகள், மரச்சாமான்கள் ஆகியவை எரிந்து நாசமாகியது.

அந்த வீட்டையொட்டி உள்ள வெங்கடாச்சலம் என்பவரது வீட்டிலும் தீ பரவியதால் அங்கிருந்த மின்சாதனங்களும் எரிந்து சேதம் அடைந்தன. சம்பவம் குறித்து கோட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். இதுபோல் குழந்தைகளை அஜாக்கிரதையாக வீட்டுக்குள் விட்டு செல்ல வேண்டாம் என்று அப்துல்கரீமுக்கு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அறிவுரை வழங்கினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story