திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.20 லட்சத்தில் திறந்த வெளி நூலகம் இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்படுகிறது


திருச்சி மாநகராட்சி சார்பில் ரூ.20 லட்சத்தில் திறந்த வெளி நூலகம் இந்தியாவிலேயே முதன் முதலாக அமைக்கப்படுகிறது
x
தினத்தந்தி 4 Nov 2018 11:00 PM GMT (Updated: 4 Nov 2018 7:57 PM GMT)

திருச்சி மாநகராட்சி சார்பில் இந்தியாவிலேயே முதன் முதலாக ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி நூலகம் அமைக்கப்படுகிறது.

திருச்சி,

திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனை எதிரில் மாநகராட்சி சார்பில் திறந்த வெளி நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நூலகத்திற்கு கதவுகள் கிடையாது, புத்தகங்கள் நனையாமல், சேதம் அடையாமல் இருப்பதற்காக கூரை அமைக்கப்பட்டு இரும்பினால் ஆன அலமாரிகள் மட்டும் இருக்கும். மாநகராட்சி சார்பில் சுமார் 2 ஆயிரம் புத்தகங்கள் இங்கு வைக்கப்படும். பொதுமக்கள் இங்கு வந்து இலவசமாக புத்தகங்களை எடுத்து சென்று படித்து விட்டு மீண்டும் அங்கேயே வைத்து விடலாம். பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் தங்களிடம் உள்ள உபயோகம் இல்லாத புத்தகங்களை இங்கு வைத்து விட்டு செல்லலாம். 24 மணி நேரமும் இந்த நூலகம் திறந்து இருக்கும். மாநகராட்சி ஊழியர் ஒருவர் மட்டுமே பணியில் இருப்பார்.

இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது கூறியதாவது:-

இந்த நூலகத்திற்கு ‘லிட்டில் பிரீ லைப்ரரி’ என ஆங்கிலத்தில் பெயர். வெளிநாடுகளில் இதுபோன்ற நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே முதன் முதலாக திருச்சி மாநகராட்சியில் தான் இந்த முன்னோடி திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இதற்காக ரூ.20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்த திறந்த வெளி நூலகம் அமைக்கப்படுகிறது. மாணவர்கள் மட்டும் அல்ல, பொதுமக்களும் தங்களிடம் உள்ள பழைய புத்தகங்களை இங்கு வைத்து விட்டு செல்லலாம். இந்த நூலகம் அமைப்பதற்கான பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஒரு மாத காலத்தில் இது திறக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வர உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story