தொடர் மழை காரணமாக அன்னவாசல் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம்


தொடர் மழை காரணமாக அன்னவாசல் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரம்
x
தினத்தந்தி 4 Nov 2018 10:45 PM GMT (Updated: 4 Nov 2018 8:38 PM GMT)

தொடர் மழை பெய்து வருவதால் அன்னவாசல் பகுதிகளில் விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அன்னவாசல்,

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யவில்லை. இதனால், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வறட்சி ஏற்பட்டது. மழை இல்லாததால் விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் அவதிப்பட்டனர். பெரும்பாலான விளை நிலங்கள் தரிசு நிலங்களாக கிடந்தன. இதனால் விவசாயத்தையே நம்பியிருந்த விவசாயிகளும், விவசாய கூலி தொழிலாளர்களும் பிழைப்புக்காக தவித்து வந்தனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் கடந்த 2 நாட்களுக்கும் மேலாக மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக அன்னவாசல் பகுதிகளில் விவசாய பணிகள் தொடங்கி உள்ளது. விவசாயிகள் தங்கள் வயல்களில் நெல், கடலை, காய்கறிகள் போன்றவற்றை சாகுபடி செய்யும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

குறிப்பாக அன்னவாசல் அருகே உள்ள செங்கப்பட்டி, சித்தன்னவாசல், சத்திரம், முக்கண்ணாமலைப்பட்டி, காலாடிப்பட்டி, வீரப்பட்டி, தாண்றீஸ்வரம், சென்னப்ப நாயக்கன்பட்டி, வவ்வானேரி, கடம்பராயன்பட்டி, புதூர், மேட்டுச்சாலை, இலுப்பூர் போன்ற பகுதிகளில் விவசாயிகள் ஏர்பூட்டியும், டிராக்டர் மூலம் உழவு செய்தும் நெல் நடவு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இது குறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தற்போது இப்பகுதியில் மிதமான மழை பெய்துள்ளது. தொடர்ந்து மழை பெய்யும் என்ற நம்பிக்கையிலும், கிணற்று பாசனத்தை நம்பியும் தற்போது நடவு பணிகளை தொடங்கி உள்ளோம். இந்த ஆண்டு போதிய மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

Next Story