தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை ரூ.1,000-க்கு விற்பனை


தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு மல்லிகை ரூ.1,000-க்கு விற்பனை
x
தினத்தந்தி 5 Nov 2018 4:15 AM IST (Updated: 5 Nov 2018 2:29 AM IST)
t-max-icont-min-icon

தீபாவளி பண்டிகையையொட்டி கரூர் மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.1,000-க்கு விற்பனையானது.

கரூர்,

கரூர் ரெயில்வே ஜங்ஷன் ரோடு பகுதியில் கரூர் மாரியம்மன் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர், எழுதியாம்பட்டி, தளவாபாளையம், செட்டிபாளையம், செக்கணம், காட்டூர், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர். மேலும் திண்டுக்கல் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்தும் கூட ஏலத்திற்காக பூக்கள் கொண்டுவரப்படுகிறது. பெரும்பாலும் மல்லிகை, முல்லை, கனகாமரம், அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்களை இங்கிருந்து வியாபாரிகள், பூக்கட்டும் பெண்கள் உள்ளிட்டோர் வாங்கி செல்கின்றனர். ஏலம் நடத்தும் மார்க்கெட் கடைக்கு ஒரு குறிப்பிட்ட தொகை கமிஷனாக வழங்கப்படுகிறது.

தீபாவளி பண்டிகை நாளை (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட இருப்பதால், கரூர் கடைவீதியில் பூஜை பொருட்கள் உள்ளிட்டவற்றை வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியபடி இருக்கிறது. தீபாவளி நாளில் இறைவழிபாட்டில் பூக்களின் தேவை பிரதானமாக இருக்கும். அந்த வகையில் தங்களுக்கு தேவையான பூக்களை ஏலம் மூலம் வாங்கி செல்ல பூ கட்டி விற்கும் பெண்கள், வியாபாரிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் நேற்று காலை முதலே கரூர் மாரியம்மன் பூ மார்க்கெட்டில் குவிந்தனர். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்ததால் பூக்களின் ஏலம் படுஜோராக நடந்தது. பின்னர் அவர்கள், தங்களுக்கு தேவையான பூக்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகைப் பூ ரூ.1,000-க்கும், அரளிப்பூ ரூ.120-க்கும்,ஜாதிப்பூ ரூ.600-க்கும்,முல்லைப்பூ ரூ.700-க்கும்,மஞ்சள்- வெள்ளை நிற ஹைபிரிட் செவ்வந்தி ரூ.120-க்கும், சாதா செவ்வந்தி ரூ.80-க்கும், கனகாமரம் ரூ.700-க்கும் ஏலத்தில் விலைபோனதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். இதை தவிர மரிக்கொழுந்து ஒரு கட்டு ரூ.30-க்கும், துளசி 4 கட்டு ரூ.40-க்கும் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

Next Story