இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்


இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் - அமைச்சர் கே.பி.அன்பழகன்
x
தினத்தந்தி 4 Nov 2018 11:30 PM GMT (Updated: 4 Nov 2018 9:24 PM GMT)

இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என்று அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்தார்.

பாலக்கோடு,

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சரும், தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான கே.பி.அன்பழகன் பாலக்கோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்திலுள்ள அரூர் (தனி), பாப்பிரெட்டிப்பட்டி உள்பட 20 சட்டமன்ற தொகுதிகளிலும் வரும் இடைத்தேர்தலில் அ.தி.மு.க. மாபெரும் வெற்றி பெறும். தற்போது 3 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா விளக்கம் கேட்டுள்ளது சரியே. அவர்கள் அ.தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்று விட்டு தற்போது மாற்று இயக்கங்களில் பதவிகளை வகிப்பதால் இதற்கு உரிய விளக்கங்களை அளிக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய 2 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்த பின்பு அப்பகுதிகளில் பல்வேறு வளர்ச்சிப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போதும் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

டி.டி.வி.தினகரன் அணியில் உள்ள தகுதி நீக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி மக்களிடம் மேல்முறையீடு குறித்து எந்த கருத்தும் கேட்க வில்லை. பதவி சுகத்திற்காக சென்றவர்களை தவிர வேறு எந்த காரணமும் இல்லை. அனைத்து அடிப்படை தொண்டர்களும் அ.தி.மு.க.விலேயே இருக்கிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் ஆரம்பத்திலிருந்தே துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்போது எந்தவித பாதிப்புகளும் இல்லை என்று அவர் கூறினார்.

அப்போது தர்மபுரி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், முன்னாள் மாவட்ட ஊராட்சித் தலைவர் நாகராஜன், முன்னாள் பாலக்கோடு சர்க்கரை ஆலைத் தலைவர் ரங்கநாதன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கோபால், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர் சங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story